கண்மாய்க்குத் தண்ணீர்: எட்டு கிராம மக்கள் சாலை மறியல்!

Published On:

| By Balaji

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் கண்மாய்க்குத் தண்ணீர் திறந்துவிடக்கோரி எட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் மன்னவராதி கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் பாசனத்தை நம்பி சிலுக்குவார்பட்டி, மன்னவராதி, சீரங்கம்பட்டி, கவிராயபுரம் உள்ளிட்ட எட்டு கிராமங்களில் சுமார் 10,000 நிலங்களில் விவசாயம் நடக்கிறது. ஆனால் போதிய மழையில்லாததால் கடந்த 15 ஆண்டுகளாக மன்னவராதி கண்மாய் நிரம்பவில்லை. கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பும் இதற்கு ஒரு காரணமாக உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இதற்கிடையே நடப்பு வடகிழக்கு பருவமழை காலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இதேபோல் நிலக்கோட்டை மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதிகளிலும் அதிக அளவு மழை பெய்தது. இதனால் நிலக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்மாய் மற்றும் குளங்கள் நிரம்பின. ஆனால் சிலுக்குவார்பட்டி மன்னவராதி கண்மாய்க்கு மட்டும் தண்ணீர் வரவில்லை. இதனால் அந்த கண்மாய் மழை பெய்தும் வறண்டு காணப்படுகிறது. மேலும் அதை நம்பியுள்ள எட்டு கிராம விவசாயிகளும் வேதனை அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து மன்னவராதி கண்மாய்க்குத் தண்ணீர் திறந்துவிடக்கோரி பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தாரை சந்தித்து விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். அதன்பேரில் சிலுக்குவார்பட்டி, மன்னவராதி கண்மாய்க்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாயில் உடைப்பை ஏற்படுத்தி தண்ணீரை வேறு கண்மாய்க்குத் திருப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதனால் மன்னவராதி கண்மாய்க்கு தண்ணீர் வரவில்லை. இதற்கிடையே பக்கத்து கிராமங்களில் உள்ள மற்ற கண்மாய்களுக்கும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சிலுக்குவார்பட்டி, மன்னவராதி உட்பட எட்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள், மன்னவராதி கண்மாய்க்குத் தண்ணீர் திறந்துவிடக்கோரி நேற்று (ஜனவரி 2) சிலுக்குவார்பட்டியில் உள்ள மதுரை – நிலக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மன்னவராதி கண்மாய்க்குத் தண்ணீர் திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சிலுக்குவார்பட்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share