திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் கோயில் அருகே மின்தகன மேடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு நகராட்சி சார்பில் களக்காடு மூனாற்று பிரிவு அருகே மின்தகன மேடை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு களக்காடு புதுத்தெரு, கக்கன்நகர் கிராம மக்கள் கடும் எதிர்த்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பேசியுள்ள கிராம மக்கள், “நகராட்சி மின்தகன மேடை அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தின் அருகே மாசான சுவாமி கோயிலும், கக்கன்நகர் குடியிருப்பும் உள்ளது. மேலும், அந்த வழியாகத்தான் கிராம மக்கள் கோயிலுக்கும், ஆற்றுக்கும் வந்து செல்கின்றனர்.
கோயிலுக்கு வரும் பாதையில் மின்தகன மேடை அமைக்கப்பட்டால் கோயிலுக்கு வருவதும், ஆற்றுக்குச் செல்வதிலும் தடை ஏற்படும். மேலும் கோவில் திருவிழா காலங்களில் இடையூறாக இருக்கும். எனவே இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வேறு இடத்தில் மின்தகன மேடை அமைக்க வேண்டும். இதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகளுக்கும் மனுக்கள் அனுப்பி உள்ளோம். இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினர்.
**-ராஜ்**