உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த வில்லேஜ் குக்கிங் யூடியுப் சேனல் குழுவினர் பங்கேற்று தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் அடுத்தாண்டு ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் #OneTrillionDreams என்ற பிரச்சாரத்துடன் உலக முதலீட்டாளர்கள் மாநாடு (GIM-2024) நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக மாநிலத்தின் தொழில்துறை உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் வியக்கத்தக்க மனிதர்களின் வெற்றிக் கதைகளை விவரிக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.
அதற்காக “#FacesBehindNumbers” சமூக ஊடக பிரச்சாரத்தை தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேற்று (டிசம்பர் 26) தொடங்கி வைத்தார்.
அதன்படி கிராமத்து சமையலை வித்தியாசமாக வழங்கி சமூக ஊடகங்களில் மக்களை கவர்ந்த ’தி வில்லேஜ் குக்கிங்’ யூடியூப் சேனல் குழுவினர் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு தங்களது அனுபவத்தை பகிரந்து கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2.33 கோடி சப்ஸ்கிரைபர்கள்!
புதுக்கோட்டையில் உள்ள சின்ன வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் பிரபலமான இந்த யூடியூப் சேனலில் இடம்பெறும் எம்.பெரியதம்பி மற்றும் வி.அய்யனார், முத்துமாணிக்கம், வி.முருகேசன், ஜி.தமிழ்செல்வன் வி.சுப்பிரமணியன் (ஒளிப்பதிவாளர்) ஆகிய 6 பேர் கலந்துகொள்ள உள்ளனர்.
வில்லேஜ் குக்கிங் சேனல் பாரம்பரிய தமிழ் கிராமத்து உணவுகளை சமைப்பதில் கவனம் செலுத்துகிறது. மேலும் இப்போது புதுமையான சமையல் குறிப்புகளை தயாரிக்கும் முயற்சியிலும் இக்குழு இறங்கியுள்ளது.
இன்றைய தேதிப்படி தி வில்லேஜ் குக்கிங் சேனலில் சுமார் 23.3 மில்லியன் (2.33 கோடி) சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். மேலும் அவர்களின் பெரும்பாலான வீடியோக்கள் 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எங்கே தவறு செய்கிறோம் என்பதை ஆராய்ந்தோம்!
இதுகுறித்து வில்லேஜ் குக்கிங் சேனலைச் சேர்ந்த சுப்ரமணியன் தி இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “ “நாங்கள் ஒரு சிறிய கிராமத்திலிருந்து வீடியோக்களுடன் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம், இப்போது உலகளாவிய நிகழ்வின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
கடந்த ஏப்ரல் 2018ல் சேனலை அதிகாரப்பூர்வமாக தொடங்கினோம். ஆனால் பார்வைகள் எதுவும் இல்லை. ஆரம்பத்தில் இது எளிதான வணிகம் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் நாங்கள் நிறைய சிரமங்களை எதிர்கொண்டோம்.
ஒருகட்டத்தில் வீடியோக்கள் வெளியிடுவதை நிறுத்தி, நாங்கள் எங்கே தவறு செய்கிறோம் என்பதை ஆராய்ந்தோம். அடுத்த சில மாதங்களில் நாங்கள் மற்ற சமையல் சேனல்களை ஆய்வு செய்து, அவற்றில் யூடியூப் வழிகாட்டுதல்களுடன் எதை கடைபிடிக்கலாம் என்பதை கற்றுக்கொண்டோம்.
பின்னர் அக்டோபர் 2018ல், கரையான்கள் குறித்த சமையல் வீடியோவை நாங்கள் யூடியூப்பில் வெளியிட்டோம், அது வைரலானது. அப்போதிருந்து, எங்களை யாரும் தடுக்கவில்லை. எங்கள் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது.
மாதத்திற்கு ரூ.10 லட்சம்!
முன்பு, நாங்கள் வாரத்திற்கு மூன்று வீடியோக்களை வெளியிட்டோம். ஆனால் நாங்கள் இப்போது ஒரு மாதத்திற்கு மூன்று முதல் நான்கு வீடியோக்களை மட்டுமே வெளியிடுகிறோம். திட்டமிடலுக்கு மூன்று நாட்கள், படப்பிடிப்பிற்கு இரண்டு நாட்கள் என எடுத்துக்கொள்கிறோம். மீதமுள்ள நேரத்தை வீடியோ எடிட்டிங் மற்றும் டிசைனிங்கிற்காக பயன்படுத்துகிறோம். தற்போது சேனல் மூலம் மாதம் ரூ.10 லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கிறோம். வரி செலுத்திய பிறகு, மீதமுள்ள பணத்தை எங்களிடையே பிரித்துக்கொள்கிறோம்.
எங்களை பின்பற்றுபவர்களின் ஊக்கத்தால் நாங்கள் இந்த உயரத்தை எட்டியுள்ளோம். எனவே அவர்களுக்கு தரமான உள்ளடக்கத்தை வழங்க நாங்கள் அதிக நேரதை எடுத்துக்கொள்கிறோம்.” என்று சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
வில்லேஜ் குக்கிங் சேனல் ஒரு எடுத்துக்காட்டு!
இதுகுறித்து தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை கொண்டு வருவதற்கான நோடல் ஏஜென்சியான கைடன்ஸின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான விஷ்ணு வேணுகோபால் கூறுகையில், ““தமிழ்நாடு மிகப்பெரிய ஆற்றலைக் கொண்ட படைப்பாற்றல் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகும். உலகளவில், கிரியேட்டிவ் எகானமி என்பது மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாகும். இது மிகப்பெரிய திறமையாளர்களைப் பயன்படுத்துகிறது. தமிழ்நாட்டில் இது போன்ற திறமைகள் பல்வேறு இடங்களில் உள்ளது. அவற்றை நாங்கள் பயன்படுத்த விரும்புகிறோம். தொழில்நுட்பம் மற்றும் ஆக்கப்பூர்வமான அம்சம் எவ்வாறு வாழ்வாதாரத்தையும் திறமையையும் மாற்றியமைக்கிறது என்பதற்கு வில்லேஜ் குக்கிங் சேனல் ஒரு எடுத்துக்காட்டு” என்று விஷ்ணு தெரிவித்துள்ளார்.
உலக முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கிராமப்புற வாழ்வியலை அடிப்படையாக கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த தி வில்லேஜ் குக்கிங் சேனல் குழு பங்கேற்க உள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இதுபோன்ற முன்னெடுப்பு கிரியேட்டிவ்வான திறமையாளர்களை சர்வதேச அரங்கில் காலடி எடுத்து வைப்பதற்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
எண்ணூர் கோரமண்டல் ஆலை மூடல்… தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி!
நெருங்கும் புத்தாண்டு: தொடர் உயர்வில் தங்கம்!