”விக்கிரவாண்டியில் பணம் வெல்லாது” : டாக்டர் ராமதாஸ்

அரசியல் விக்கிரவாண்டி இடைத் தேர்தல்

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் பணம் வெல்லாது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அன்புமணிக்கு ஆதரவாக டாக்டர் ராமதாஸ், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று (ஜூன் 29) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“திண்டிவனம் மண் பல புரட்சி வரலாறுகளுக்கு சொந்தமானது. பணத்தால் மட்டுமே அனைத்தையும் சாதிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு பாடம் புகட்டிய மண்.

இந்தியா விடுதலை அடைந்து குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பிறகு 1952-ஆம் ஆண்டில் முதல் மக்களவைத் தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. அப்போது திண்டிவனம் மக்களவைத் தொகுதி இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்தது.

அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுப்பிரிவு வேட்பாளராக இராம்நாத் கோயங்காவும், தனிப் பிரிவு வேட்பாளராக முனுசாமி பிள்ளையும் போட்டியிட்டனர். இராமசாமி படையாட்சியார் தலைமையிலான தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி சார்பில் பொதுப்பிரிவு வேட்பாளராக திருகுறள் முனுசாமி அவர்களும், தனிப்பிரிவு வேட்பாளராக ஜெயராமன் அவர்களும் போட்டியிட்டனர்.

இராம்நாத் கோயங்கா அந்தக் காலத்தில் இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். டாட்டா, பிர்லா ஆகியோருக்கு அடுத்தபடியாக கோயங்கா தான் பெரும் பணக்காரர். இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி இதழ்களின் அதிபர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர். காந்தியடிகள், ஜவகர்லால் நேருவுக்கு நெருங்கிய நண்பர். 1926-ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட முனுசாமியோ மிகச்சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். கோயங்கா விமானத்தில் பயணித்தும், பின்னர் ஹெலிகாப்டரில் பறந்தும் பரப்புரை மேற்கொண்டார். ஆனால், ஏழையான திருக்குறள் முனுசாமி அவர்களுக்கோ அவரது மிதிவண்டி தான் பரப்புரை வாகனம் ஆகும்.

இப்போது இருப்பது போன்று அப்போது தேர்தல் நடத்தை விதிகள் கடுமையானதாக இல்லை. அதைப் பயன்படுத்திக் கொண்டு இராம்நாத் கோயங்கா ஹெலிகாப்டர் மூலம் துண்டறிக்கைகளை வீசி பரப்புரை செய்ததாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டரில் இருந்து ஒரு ரூபாய் நோட்டுக்களை வாரி இறைத்து தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர்.

மறுபுறம் முனுசாமிக்கோ தேர்தல் செலவுக்கே பணம் கிடையாது. அதனால் அந்தத் தேர்தலில் கோயங்கா தான் வெல்வார்; முனுசாமியின் தோல்வி உறுதி என்று கூறப்பட்டது.

தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான போது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோயங்கா தோல்வியடைந்தார். அவருக்கு கிடைத்த வாக்குகள் 1,22,561 மட்டும் தான். ஆனால், திருக்குறள் முனுசாமி 2,14,772 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

பணம் தான் வெல்லும் என்று நினைத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இனம் தான் வெல்லும் என்று நிரூபித்த மண் திண்டிவனம்.

அதே வரலாற்றை படைக்க காத்துக் கொண்டிருக்கிறது விக்கிரவாண்டி. பாட்டாளிகளாகிய நீங்கள் ஆற்றும் களப்பணி தான் அந்த புதிய வரலாறுக்கான அடித்தளமாக அமையும்” என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

வேந்தன்

வெற்றி வேண்டுமா? இதோ 5 டிப்ஸ்!

கள்ளச்சாராயம் காய்ச்சினால், விற்றால் ஆயுள் தண்டனை!

+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *