வரும் ஜூலை 10-ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக சீனியர் அமைச்சர்கள், பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஒட்டி விழுப்புரம் மாவட்ட திமுக தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நேற்று (ஜூன் 30) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட அமைச்சரும், திமுக துணை பொதுச்செயலாளருமான பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக கொள்கை பரப்பு செயலாளருமான ஜெகத்ரட்சகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், எஸ்.எஸ்.சிவசங்கர், சக்கரபாணி, சி.வி.கணேசன், சேகர் பாபு, அன்பில் மகேஷ் ஆகிய 8 அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தின் போது அனைத்து அமைச்சர்களுக்கும் முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது… “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட்டது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அதிக ஓட்டுக்கள் பெற வேண்டும் என்று தங்களால் முடிந்த அளவு பணம் மற்றும் பரிசு பொருட்களை ஒவ்வொரு அமைச்சர்களும் வாக்காளர்களுக்கு போட்டிப்போட்டுக் கொண்டு கொடுத்தனர்.
இதனால் சில பகுதிகளில் அதிகமாகவும், சில பகுதிகளில் குறைவாகவும் வெவ்வேறு அளவுகளில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் அதுபோன்ற நிலை வரக்கூடாது. பணமோ, பொருளோ ஒரே மாதிரியாக வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி பரிசுப் பொருளோ, பண விநியோகமோ விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் ஒரே சீராக இருக்கும் என்கிறார்கள்” திமுக வட்டாரங்களில்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோடியின் கேரண்டியை நிராகரித்த தமிழக மக்கள்: மக்களவையில் ஆ.ராசா