காலிஸ்தான் இயக்க ஆதரவாளர் குர்பத்வந்த் பன்னுன் கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் ‘ரா’(RAW) அதிகாரி விகாஷ் யாதவை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதை, 2023 வருடம் அவர் மீது போடப்பட்ட வழக்கு பல வருடங்களுக்கு தாமதப்படுத்த வாய்ப்புள்ளது.
இந்தியாவில் வசிக்கும் சீக்கியர்களுக்கு ‘காலிஸ்தான்’ என்ற தனி மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கை ஏறத்தாழ 70 வருடங்களாக இருந்து வருகிறது.
இதற்காக சில சீக்கியர்கள் ‘காலிஸ்தான் இயக்கம்’ என்ற ஒன்றை உருவாக்கி அவ்வப்போது போராட்டமும் நடத்தியுள்ளார்கள். அது மட்டுமின்றி பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்திரா காந்தி ஆட்சியில் 1984 வருடம் இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்’இல் கொல்லப்பட்ட பிந்த்ரன்வாலே கூட காலிஸ்தான் இயக்கத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்தான்.
இந்த இயக்கத்திற்கு வெளிநாடுகளில் இருக்கும் சீக்கியர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் கனடாவைச் சேர்ந்த குர்பத்வந்த் சிங் பன்னுன். வக்கீலான இவர் ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ என்ற இயக்கத்தை ஆரம்பித்தவர்.
இந்த அமைப்பு, இந்திரா காந்தி கொலைக்குப் பின்பு கொல்லப்பட்ட சீக்கியர்களுக்காக நீதி பெறுவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இவரைத்தான் சென்ற வருடம் நிகில் குப்தா என்ற இந்தியர் கொல்ல முயன்றதாக அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்டார்.
நிகில் குப்தா செக் நாட்டில் இந்த வருடம் ஜுன் மாதம் கைது செய்யப்பட்டு, ஜூன் 14ஆம் தேதி அமெரிக்காவிற்கு அழைத்து செல்லப்பட்டு, சிறையில் அடைக்கபட்டார்.
மேலும் முன்னாள் ‘ரா’ அதிகாரி விகாஷ் யாதவ்தான் குர்பந்த்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய நிகில் குப்தாவை ஏற்பாடு செய்தார் என்று அக்டோபர் 18 அன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
இதனால் விகாஷ் யாதவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவிடம் அமெரிக்கா தெரிவித்தது. ஆனால் தற்போது வரை அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை.
இந்த நிலையில்தான், சென்ற வருடம் இவர் மீது டெல்லி போலீஸால் போடப்பட்ட கடத்தல் மற்றும் திருட்டு வழக்கு, அமெரிக்காவிடம் இவரை ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது.
டெல்லியைச் சேர்ந்த ராஜ்குமார் வாலியா என்ற வியாபாரியை சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய்க்காக கடத்தினார் விகாஷ் யாதவ் என்பதற்காக அவரை டெல்லி போலீஸார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்தது.
இதற்கு மூன்று மாதத்திற்குப் பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கு விசாரணை இன்னும் முடிவுபெறவில்லை. அதனால் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டால், அந்த தண்டனை காலம் முடிந்த பிறகு தான், அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்கமுடியும் என்ற நிலைமை உருவாகியுள்ளது.
மேலும் 2008 மும்பை தாக்குதலில் இந்தியாவால் குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்கரான டேவிஎட் கோல்மேன் ஹெட்லியை இதுவரை அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை.
இது மட்டுமல்லாமல், இந்தியாவிற்குள் வருவதற்கு டேவிட் கோல்மேன் ஹெட்லிக்கு டிக்கட் எடுத்துக்கொடுத்த, தற்போது லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் இருக்கும் தஹவ்வூர் ரானாவையும் அமெரிக்கா இதுவரை இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பாலியல் புகார் : ஈஷா ஹோம் ஸ்கூல் நிர்வாகம் மறுப்பு!
2 லட்சம் கோடி நிதி பற்றாக்குறை : நெருக்கடியில் அமெரிக்காவின் அடுத்த அதிபர்!