விஜய்சேதுபதி பட இயக்குநர் சோசியல் மீடியாவில் புலம்பியதன் பின்னணி !

Published On:

| By Balaji

விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ . இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோக்நாத் இயக்கியிருக்கிறார். இவர், எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளராக இருந்தவர். இந்த, ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’திரைப்படம் வருகிற மே மாதம் வெளியாக இருக்கிறது. தற்பொழுது, படத்தின் டீஸர் வீடியோ இணையத்தில் வெளியாகி டிரெண்டாகிவருகிறது.

இந்நிலையில், படத்தின் இயக்குநர் பகீரென ஒரு கருத்தை சோசியல் மீடியாவில் தெரிவித்திருந்தார். அவர் ஃபேஸ்புக்கில் இவ்வாறு கூறியிருந்தார், “மன்னிக்கவும்… இது வரை நான் இயக்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த யாதும்ஊரே யாவரும்கேளிர் படம் பற்றிய அத்தனை அப்டேட்சையும் நான் தவறாமல் பதிவிட்டிருக்கிறேன். இந்த முறை டீசர் வெளிவருவது சம்மந்தமான போஸ்டரையோ வெளிவந்த டீசரையோ நான் எனது முக நூல் பக்கத்தில் வெளியிடவில்லை. அதற்கு மிக முக்கியமான காரணம் நான் இயக்கிய படமான யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்துக்கான டீசர் வெளி வருகிறது என்று எனக்கு தெரியாது.

ADVERTISEMENT

கூடவே மிக முக்கியமான தகவல் அந்த டீசருக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. நான் அந்த டீசர் ரிலீஸ் ஆகி 45 நிமிடங்கள் கழித்தே பார்த்தேன். திரும்பவும் மன்னிக்கவும் நான் வேறு வழியில்லாமல் அந்த டீசரை பற்றி பேசாமல் மௌனமாக கடந்து போகிறேன். உண்மையில் இந்த படத்தின் ஆன்மாவை உள்ளங்கையில் காட்ட கூடிய நான் கட் பண்ணிய டீசர் என்னிடம் இருக்கிறது. டப்பிங் செய்யப்படாமல் RR செய்யப்படாமல் di செய்யப்படாமல் அப்படியே ராவாக இருக்கிறது. தயாரிப்பு தரப்போடு இந்த குளறுபடிக்கு அடிப்படை காரணம் பற்றி கேட்டிருக்கிறேன். தக்க பதில் வந்தால் என் முக நூல் நண்பர்களுக்கு அறிவிக்கிறேன்.” என்று கூறியிருந்தார்.

எனக்கும் டீஸருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதோடு, இயக்குநருக்குத் தெரியாமல் எப்படி டீஸர் உருவானது என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.

ADVERTISEMENT

இதுகுறித்து விசாரித்தால், புது தகவல் ஒன்று கிடைத்துள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்துக்கான டீஸர் ஒன்றை இரண்டு நிமிடத்துக்கு கட் செய்து வைத்திருந்திருக்கிறார் இயக்குநர். அதைப் பார்த்த தயாரிப்பு தரப்பு, கமர்ஷியலாக இல்லை என்று தெரிவித்திருக்கிறது. ஆனால், கமர்ஷியலாக ஒரு வீடியோவை கட் செய்ய மறுத்திருக்கிறார் இயக்குநர். அதனால், தயாரிப்பு தரப்பே கமர்ஷியல் விஷயங்களுடன் ஒரு டீஸரை தயார் செய்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், விஜய்சேதுபதியிடமும் காட்டியிருக்கிறார்கள்.

தயாரிப்பு தரப்பின் டீஸர் வெர்ஷன் கமர்ஷியலாக நன்றாக இருப்பதாகவும், அதை ரிலீஸ் செய்யவும் சம்மதமும் தெரிவித்திருக்கிறார். அதோடு, டிரெய்லரை இயக்குநரின் விருப்பப் படி தயார் செய்யவும் அறிவுறுத்தியிருக்கிறார். அதோடு, இரண்டு தரப்பிலும் இருந்த சிக்கல் பேசி முடிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, தயாரிப்பு தரப்பு டீஸரை ரிலீஸ் செய்திருக்கிறது. இந்த சம்பவங்களெல்லாம் நடந்தப் பிறகு தான், இயக்குநர் இவ்வாறு புலம்பியிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

ADVERTISEMENT

எவ்வளவு நல்ல கதையாக இருந்தாலும், டீஸரும், டிரெய்லரும் மட்டுமே படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அவை கமர்ஷியலாக இருக்க வேண்டுமென தயாரிப்பு தரப்பு நினைப்பது சரி என்றே கோலிவுட் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன. இந்நிலையில், இயக்குநரின் டிரெய்லர் வெர்ஷன் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துப் பார்க்கலாம்.

– தீரன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share