தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் NDTV-க்கு கொடுத்த ‘விசித்திர’ பேட்டியை முன்வைத்து விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
மூத்த பத்திரிகையாளர் கவின்மலர்: விஜய் நேர்காணல் தரமாட்டேன் என என்.டி.டி.வி தன்னை தொடர்புகொண்டபோது சொல்லி இருக்கலாம்.
பனையூருக்கு வரவழைத்து பேட்டி தரமாட்டேன் என்கிறார். ‘வந்தது வந்துட்டீங்க. சரி. உக்காந்து பேசலாம்’ என 45 நிமிடங்கள் பேசி இருக்கிறார். சிலரைப் பார்க்க விருப்பமில்லை என்று குறிப்பாகச் சொன்னபிறகும் பட்டென்று சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்கு வந்தால் நாம் வேறு வழியின்றி நாட்டு நடப்புகளை எல்லாம் பேசி, வெயில் அதிகம், குளிர் அதிகம், விலைவாசி என ஒரு மாதிரி பேசி சமாளிப்போமே அப்படி விஜய் ஏதோ பேசி அனுப்பி இருக்கிறார்.
வந்தது வந்துட்டோம் ஒரு போட்டோ எடுத்துக்குவோம் என அவரோடு நின்று ஒரு போட்டோ எடுத்துக்கொண்டு வந்தாயிற்று.
அந்த இடத்தில் நாம் இருந்தால் என்ன செய்திருப்போம். பேட்டி கேட்டு கிடைக்கவில்லை, முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டதே என, பனையூர் போனது தெரியாமல் பேசாமல் இருந்திருப்போம். விஜய் கூட போட்டோ எடுத்ததை பெருமையாக உணரும் பதிவராக இருந்தால் அதை தன் தனிப்பட்ட பக்கத்தில் போட்டு பெருமைகொள்வார்.
நிற்க!
இங்கே என்ன நடந்திருக்கிறது? என்.டி.டி.வி ஓர் அறிவிப்பை வெளியிடுகிறது. “இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக’ ஒரு நேஷனல் சேனலோடு விஜய் பேசி இருக்கிறார்” எனப் பெருமையோடு அறிவிப்பு. அவர் இதைப் பேசினார் அதைப் பேசினார் எனச் சொல்லி டீஸர் போல இருந்தது அந்த அறிவிப்பு.
அப்புறம் பேட்டி சேனலில் வருகிறது. யாருடைய பேட்டி? விஜய் பேட்டியா? இல்லை இல்லை விஜய் தரிசனம் கிட்டிய பரவச அனுபவத்தை பக்தர்கள் போலப் பகிர்ந்துகொள்கின்றனர் ஊடகவியலாளர்கள். ஆபீஸில் உடன் வேலைபார்க்கும் செய்தியாளர்களிடம் விஜயை சந்தித்தது பற்றி சிலாகித்து இவர்கள் சொன்னதை அப்படியே வீடியோ எடுத்து சேனலில் ஒளிபரப்புகின்றனர். அப்போ விஜய்? பேட்டி? அது கிடக்கு.
கடவுளைப் பார்த்ததாகச் சொல்பவனெல்லாம் கடவுளே என நம்பும் முட்டாள்கள் போல பார்வையாளர்களை எண்ணும் அபத்தம்.
இதையெல்லாம் ஜர்னலிசம்?
மூத்த பத்திரிகையாளர் அ.தா.பாலசுப் ரமணியன்: தொலைபேசி வழி, இணைய வழி, மின்னஞ்சல் வழி, புலனவழி செவ்விகளை ‘நேர்க்காணல்’ என்று அழைக்க நேரும்போதெல்லாம் நெஞ்சில் ஒரு நெருடல் இருக்கும்.
நேரில் காணாமல் பெற்ற விடைகளை எப்படி நேர்க்காணல் என்று குறிப்பது?
வடமொழி சொல்லான பேட்டி ஆகட்டும், தமிழ்ச் சொல்லான நேர்க்காணல் ஆகட்டும் – நேரடிப் பொருளில் – சந்திப்பதைக் குறிப்பிடுகிறவை மட்டுமே. சந்திக்கும்போது கூறும் கருத்துகளுக்கான ஆகுபெயராகவே நேர்க்காணல்/பேட்டி என்பவை இதுவரை இதழியலில் பயன்பட்டுள்ளன.
சந்திக்காமல் பெறும் விடைகளுக்கு மறைகாணல் என்று கூறலாம் என்று (வேறொரு ஏரணத்தின் – logic – படி) சொல்லாக்கம் செய்திருக்கிறார் முன்னணி (pun intended) இதழாளர் Vijayasankar Ramachandran. புதிய சொல்லைப் பெற்றதில் மகிழ்ச்சி.
ஆனால், அவர் எந்த நிகழ்வுக்காக இந்த சொல்லைப் படைத்தாரோ அங்கே இது பொருந்தாது என்று கருதுகிறேன். நேரில் பாராமல் விடைகளைப் பெற்றால் மறை காணல் – சரி.
நேரில் கண்டும் விடை எதுவும் பெறாமல், பரவசம் மட்டுமே அடைந்தால் அதற்கு என்ன பெயர்? இதற்கும் ஒரு சொல்லை எங்கள் விஜய் சாரே படைத்துத் தரவேண்டும். இதழியலில் இது ஒரு புதிய புலப்பாடு (phenomenon) என்பதால் இந்த சொல்லாக்க முயற்சி உடனே பலன் தராமல் போகலாம்.
ஆனால், விஜய் நிகழ்த்திய இந்த அதிசயத்துக்கான சொல்லை எங்கள் விஜய் சார்தான் உருவாக்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்: இதுவரை உலகில் எந்தத் தலைவரும் செய்யாத ஒரு வீரச்செயலை, ஒரு புதுமையைச் செய்திருக்கிறார் தவெக தலைவர் நடிகர் விஜய்.
இந்தியாவின் புகழ்பெற்ற NDTV என்கிற ஆங்கில செய்தி தொலைக்காட்சியை வீட்டுக்கு அழைத்து, ஒரு நேர்காணல்.
ஆம், நேர்காணல் in literal sense. இவரைக் கண்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.
எதற்கு இந்த சந்திப்பு, என்ன கேட்டார்கள், என்ன சொன்னார் என்பதை யாரும் காணவும், கேட்கவும் முடியாது.
நாங்கள் பல விஷயம் பேசினோம், அவர் நிதானமாக பதிலளித்தார் என்று ராஹுல் கன்வால் தொலைக்காட்சியில் சொன்னார். ஆனால் என்னவென்று யாருக்கும் தெரியாது.
இப்படி ஒரு பேட்டியைக் கேள்விப்பட்டிருக்கிறோமா?
என்ன காரணாமக இருக்கலாம்?
தனக்கு ஒன்றும் தெரியாது என்று இந்தியாவுக்கே தெரிந்துவிடக்கூடாதென நினைத்திருக்கலாம்.
இங்லிஷ் நேர்காணல் என்பதால் அது தயக்கத்தைக் கொடுத்திருக்கலாம்.
இவர் வழி தனி வழி!
துக்கவீட்டில் இருப்பவரைச் சென்று காணாமல் தன் வீட்டுக்கு வரவழைத்து துக்கம் விசாரிப்பார்.
செய்தித்தொலைக்காட்சியை வீட்டுக்கழைத்து நேர்காணல் கொடுப்பார், அதைப் பதிவு செய்யக்கூடாதென்று நிபந்தனையுடன்.
திடீரென உறக்கத்திலிருந்து விழித்து பரப்புரை செய்ய கிளம்புவார்.
சில இளம் அறிவாளிகள்தான் மாற்றம் வேண்டுமென்று ஏதோ சொல்கிறார்களே. இதுதான் அந்த மாற்றமா..?
