புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு வரும் 5ம் தேதி ரோடு ஷோ நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வரும் டிசம்பர் 5 தேதி காலப்பட்டு பகுதியில் இருந்து உப்பளம் தண்ணீர் டேங்க் வரை மக்களை சாலையில் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி புதுச்சேரி நிர்வாகி புதியவன் கடந்த புதன் கிழமை புதுச்சேரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.
ஆனால் தவெக தரப்பில் அனுமதி கேட்கப்பட்ட சோனாபாளையம் சந்திப்பு மிகவும் குறுகலான பகுதி. இதனால் இந்த இடத்தில் ரோடு ஷோ நடந்தால் அசம்பாவிதங்களுக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறி மறுநாளே காவல்துறை மறுப்பு தெரிவித்தது.
இதையடுத்து புஸ்ஸி ஆனந்த், ஐஜி, டிஐஜி, உள்ளிட்ட உயரதிகாரிகளை சந்தித்து தொடர்ச்சியாக ரோடு ஷோக்கு அனுமதி கேட்டு வேண்டுகோள் விடுத்து வந்தார். ஆனால் காவல் துறையினர் அனுமதி வழங்கவில்லை.
இதையடுத்து 3 ஆவது நாளாக ரோடு ஷோக்கு அனுமதி கோரி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முதுநிலை காவல் கண்காணிப்பாளரை சந்திக்க இன்று காலை அலுவலகம் சென்றனர். ஆனால் அவர் அலுவலகத்தில் இல்லை.
இதையடுத்து விஜயின் ரோடு ஷோக்கு அனுமதி வழங்குவது குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ரங்சாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், டிஐஜி சத்திய சுந்தரம், மற்றும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் பங்கேற்றனர்.
முதல்வருடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு டிஐஜி சத்திய சுந்தரம் விஜய்யின் ரோடு ஷோக்கு அனுமதி இல்லை. ஆனால் திறந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க தயாராக உள்ளோம். ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் மக்கள் சந்திப்பை எப்படி நடத்த முடியும்? எனவே தேதியை மாற்றி தள்ளி வைக்க கூறியுள்ளோம்”என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக பேசிய செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் செல்வம், “புதுச்சேரி சிறிய நகரம். தமிழகத்தை போன்று மிகப்பெரிய சாலைகள் இல்லை. எனவே விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்காதது நல்லது. வேண்டுமென்றால் தனியாக மைதானம் போன்ற இடத்தில் கூட்டங்களை நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
