தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ரூ.15 கோடி வரி ஏய்ப்புக்காக வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிப்ரவரி 6-ந் தேதி அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
விஜய், ”புலி” திரைப்படத்தில் நடித்ததற்கு வாங்கிய ஊதியத்தில் ரூ.15 கோடியை கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்தார் என்பது வருமான வரித்துறையின் குற்றச்சாட்டு. 2015-ம் ஆண்டு விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைகளின் போது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்களில் விஜய் ரூ15 கோடி வரி ஏய்ப்பு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து வரி ஏய்ப்பு செய்ததற்காக விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது வருமான வரித்துறை. ஆனால் ”வருமான வரித்துறை தமக்கான அபராதத்தை 2019-ம் ஆண்டு ஜூன் 30-ந் தேதிக்கு முன்னர் விதித்திருக்க வேண்டும்; 3 ஆண்டுகள் தாமதமாக 2022-ம் ஆண்டு ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது தவறு” என சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் செந்தில்குமார், ராமமூர்த்தி அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பில்,
- வருமான வரித்துறை அபராதம் விதித்ததற்கு எதிரான விஜய்யின் மனு டிஸ்மிஸ் செய்யப்படுகிறது.
- காலவரம்பை கடந்து வருமான வரித்துறை அபராதம் விதித்தது என்ற விஜய்யின் வாதம் நிராகரிக்கப்படுகிறது.
- விஜய்க்கு வருமான வரித்துறை காலவரம்புக்குள்தான் ரூ.1.50 கோடி அபராதம் விதித்துள்ளது.
- ஆகையால், காலவரம்பு பிரச்சனையைத் தவிர்த்து வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
