பெரம்பூரில் இன்று (ஏப்ரல் 18) விஜய் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படத்தி உள்ளது.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் புதிதாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய நடிகரும் தவெக தலைவருமான விஜயும், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். எடப்பாடி தொகுதியைத் தவிர மீதமுள்ள 233 தொகுதிகளிலும் தவெக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதே சமயம், நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகின்றன. பல இடங்களில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஆளும் திமுக தனது பிரச்சாரத்தை முடக்குவதாக விஜய் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், பல இடங்களில் விஜய்க்கு பிரச்சாரத்திற்கான அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் ரத்து செய்யப்பட்டது. திருப்பூர், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் திட்டமிட்டபடி பிரச்சாரம் தொடங்கிய பின்னர் பகுதியாக ரத்து செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், பெரும்பாலும் உச்சி வெயில் நேரத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு வருவதால், அவரைப் பார்க்க வருபவர்கள் கடும் வெப்பம் காரணமாக மயங்கி சரிந்து விழுவது தொடர்கதையாகி உள்ளது. மேலும் கோவை மற்றும் சென்னையில் விஜயின் பிரச்சாரத்தின் போது நகைப் பறிப்பு சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்நிலையில், இன்று தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் மீண்டும் பிரச்சாரம் செய்ய முடிவு செய்திருந்தார். வேட்பு மனு தாக்கல் செய்த கடந்த 30ஆம் தேதி ஏற்கனவே ஒருமுறை பெரம்பூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம் செய்திருந்தார். இந்த சூழலில், இன்று வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. காவல்துறையும் அனுமதி வழங்கிய நிலையில், இன்று திடீரென பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரத்தை விஜய் ரத்து செய்துள்ளார்.
பரப்புரைக்கு மாலையில் அனுமதி வழங்குவதற்குப் பதில் காலையில் அனுமதி கொடுக்கப்பட்டதால் பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக அக்கட்சியின் தரப்பில் கூறப்படுகிறது.










