விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரும் வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஜனவரி 7-ந் தேதி மீண்டும் நடைபெற உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் நடித்துள்ள கடைசித் திரைப்படம் ‘ஜனநாயகன்’. இந்த படம், நாளை மறுநாள் ஜனவரி 9-ந் தேதி வெளியிடப்படும் என படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் இன்னமும் தணிக்கை குழுவின் சான்றிதழ், ஜனநாயகன் படத்துக்கு கிடைக்கவில்லை.
இது தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனமான KVN புரடெக்ஷன்ஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை நீதிபதி பிடி ஆஷா நேற்று விசாரித்தார்.
இந்த விசாரணையின் போது ஜனநாயகன் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன்,
- ஜனநாயகன் படம் ரூ.500 கோடியில் தயாரித்துள்ளோம்.
- 22 நாடுகளில் 4 மொழிகளில் இந்த படத்தை ஜனவரி 9-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
- டிசம்பர் 18-ந் தேதி படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கோரி விண்ணப்பித்தோம். அப்போது படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர், U/A சான்றிதழ் வழங்க இருப்பதாகவும் சில காட்சிகளை நீக்கவும் வசனங்களின் உச்சரிப்பை மியூட் செய்யவும் கூறினர்.
- இதனை ஏற்று படத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
- ஆனாலும் ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்கவில்லை.
- ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு தணிக்கை குழு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.
- ஜனநாயகன் படமே வெளியாகாத நிலையில் அப்படம் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தணிக்கை குழு கூறியுள்ளது; யார் அந்த புகார்தாரர் என்பதை தெரியப்படுத்த வேண்டும் என வாதிட்டார்.
தணிக்கை குழு சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன்,
- நீங்க ரூ.500 கோடியில் படம் எடுத்தாலும் ரூ1. கோடியில் படம் எடுத்தாலும் எங்களுக்கு எல்லாமே ஒன்றுதான்.
- ஜனவரி 9-ந் தேதி படம் வெளியாகப் போவதாக அறிவித்துவிட்டதாலேயே தணிக்கை குழு சான்றிதழ் தந்துதான் ஆக வேண்டும் என்பது இல்லை.
- ஜனநாயகன் படத்தில் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் இருக்கின்றன என்பது புகார்; அதனால் மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
- இந்த வழக்கில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய ஏதுவாக வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இதனையடுத்து, ஜனநாயகன் படத்துக்கு எதிரான புகார் மனு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார் நீதிபதி பிடி ஆஷா. இவ்வழக்கின் விசாரணை இன்று ஜனவரி 7-ந் தேதி மீண்டும் நடைபெற உள்ளது.
