நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை விசாரிக்க நேற்று (மார்ச் 3) உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில், இன்று (மார்ச் 4) விஜயலட்சுமி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ”இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது. 12 வாரங்களுக்குள் போலீசார் விசாரித்து முடிவெடுக்க வேண்டும்” என்று கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் நாகரத்னா, எஸ்.சி.சர்மா அமர்வில் மார்ச் 3 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.vijayalaxmi new vidoe
அப்போது இந்த பிரச்னை முடிவுக்கு வர வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதி நாகரத்னா, “அந்த பெண்ணுக்கு ஏதேனும் இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலனையில் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு சீமான் தரப்பு வழக்கறிஞர், “இதுபற்றி எங்கள் க்ளையன்ட்டிடம் பேசிய பிறகே பரிசீலிக்க முடியும் ” என்று நீதிபதியிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிபதிகள், “எதிர்மனுதாரரின் விளக்கம் என்ன என்பதை தெரிவிக்க நோட்டீஸ் அனுப்பப்படும். இரு தரப்புக்கும் இடையே நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். எதிர் மனுதாரரின் பதிலுக்கு பிறகு, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்த பிறகு காவல்துறை சீமானிடம் விசாரிக்க வேண்டும். அதுவரை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர் தொடர்ந்து, இந்த வழக்கை மே 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.vijayalaxmi new vidoe
இந்த நிலையில், விஜயலட்சுமி வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறியிருப்பதாவது, “உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செட்டில்மென்ட் கொடுக்க வாய்ப்புள்ளதா? என்று கேட்டுள்ளது. இப்படி, சொன்னாலே சீமான் எனக்கு 10 கோடி கொடுத்து விட்டதாக கூறி விடுவார்கள். சீமானின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, எனது தரப்பில் யாராவது ஆஜராகி வாதாடியிருக்க வேண்டும்தானே?
நான் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டேன். என்னை எப்படியெல்லாம் மிரட்டினார்கள், பாலியல் தொழிலாளி என்று கூறியதையெல்லாம் உச்ச நீதிமன்றத்தில் எடுத்து கூறியிருக்க வேண்டும்தானே. அப்படி செய்யாதது ஏன்? யாரும் அந்த பெண்ணை அசிங்கப்படுத்தாதே என்று சீமானை கண்டிக்கப் போவதில்லை. இந்த அசிங்கத்துக்குள்ள என்னால போராட முடியாது. கடைசியாகவும் என்னை ஏமாத்திட்டாங்க”என்று விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.