”நான் பாலியல் தொழிலாளியா?” – விஜயலட்சுமி கண்ணீர்!

Published On:

| By christopher

vijayalakshmi questioned seeman

அந்த நடிகை பாலியல் தொழிலாளி, அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என சீமான் இன்று (மார்ச் 2) தெரிவித்த நிலையில், விஜயலட்சுமி கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார். vijayalakshmi questioned seeman

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் வழக்கில் சீமான் மீது சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த 28ஆம் தேதி இரவு காவல்நிலையத்தில் ஆஜரான சீமானிடம் 1.15 மணி நேரம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய போலீசார், ஒப்புதல் வாக்குமூலம் பெற்றனர்.

தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடைக்கோரி உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் சீமான் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ”சும்மா பாலியல் குற்றவாளி என்று என்னை சொல்லாதீர்கள்.. அந்த நடிகை தான் பாலியல் தொழிலாளி, அதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. என்னை பாலியல் குற்றவாளி என நீங்கள் எப்படி கூறுவீர்கள்? நீங்கள் என்ன நீதிபதியா? விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது என்னை எப்படி குற்றவாளி என கூறுகிறீர்கள்? ஒரு பெண் சொல்வதாலேயே எல்லாம் உண்மையாகிவிடுமா?” என சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

என்னுடைய கண்ணீர் சும்மா விடாது!

இதனையடுத்து கண்ணீருடன் வீடியோ வெளியிட்டு பேசியிருக்கிறார் நடிகை விஜயலட்சுமி.

அதில் ” நான் என்ன பாலியல் தொழிலாளியா சீமான்? என்னை பாலியல் தொழிலாளி என்று சொல்லியிருக்கிறாய்.. நான் பாலியல் தொழிலாளியாக இருந்தால் எதற்காக பெங்களூரில் என்னுடைய அக்காவுடன் கஷ்டபடப்போகிறேன்? இந்த நாள் வரை நீ தப்பித்து இருக்கலாம் ஆனால் இனிமேல் நீ தப்பிக்கவே முடியாது. என்னுடைய கண்ணீர் உன்னை என்ன செய்ய போகிறது என்பதை மட்டும் நீ பார்… என்னுடைய கண்ணீர் உன்னை சும்மா விடாது” என விஜயலட்சுமி வேதனையுடன் பேசியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share