ADVERTISEMENT

விஜயகாந்த் – ராவுத்தர் வெற்றி கூட்டணி: விஜயகாந்த் எழுதிய உருக்கமான கடிதம்!

Published On:

| By Monisha

vijayakanth wrote letter to ibrahim rawther

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பது பழமொழி. ஆனால் விஜயகாந்த் திரையுலகில் விஸ்வரூப வெற்றியை எட்டிப்பிடித்து சுவைத்தார் என்றால் அதற்கு காரணம் இப்ராஹிம் ராவுத்தர் என்கிற ஆண் என்றால் மிகையல்ல.

விஜயராஜ் என்கிற தன் உயிர் நண்பனின் சினிமா ஆசையை நிறைவேற்ற அவருடன் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி சென்னை வந்தவர் இப்ராஹிம் ராவுத்தர் என்றால் மிகையல்ல.

ADVERTISEMENT

விஜயகாந்தின் சிறுவயது முதலே அவரின் உற்ற நண்பராக இருந்தவர் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர். தனது திரைப்பயணத்தில், இப்ராஹிம் ராவுத்தரைத்தான் விஜயகாந்த் முழுமையாக நம்பினார்.

தொடக்ககாலத்தில் சென்னை தி.நகர் ராஜாபாதர் தெருவில் ஒரு சிறிய அறையில் விஜயகாந்த் தங்கியிருந்தார். அவருக்குதுணையாக இருந்தார் ராவுத்தார்.விஜயகாந்த் இனிக்கும் இளமை படத்திற்கு பின் நடிக்க வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியபின் தான் நடிக்க வேண்டிய படங்கள், கதைகளை தேர்வு செய்யும் பொறுப்பை ராவுத்தரிடம் ஒப்படைத்திருந்தார் விஜயகாந்த். சினிமாவில் வெற்றிகரமான கதாநாயகனான பின்பும் கதை கேட்பதில் இருந்து புதிய படங்களை தயாரிப்பது என அனைத்தையும் இறுதி செய்யும் அதிகாரத்தை இப்ராஹிம் ராவுத்தருக்குத்தான் விஜயகாந்த் வழங்கியிருந்தார்.

ADVERTISEMENT

அதனால்தான் இப்ராஹிம் ராவுத்தர், ராவுத்தர் பிலிம்ஸ், தமிழ் அன்னை சினி கிரியேசன்ஸ் மற்றும் ஐ.வி. சினி புரொடெக்சன்ஸ் என்ற பேனர்களில் பல்வேறு திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களை தொடங்கி புதிய திரைப்படங்களைத் தயாரிக்க முடிந்தது. இந்த பேனர்களில் விஜயகாந்த் நடிப்பில் ஏராளமான வெற்றி திரைப்படங்கள் வெளியாகின. இயக்குநர் அரவிந்த்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த உழவன் மகன் திரைப்படம்தான், ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம். 1987-ல் வெளியான இந்த திரைப்படம், அந்த வருடம் தீபாவளிக்கு வெளியான ரஜினிகாந்த் நடித்த மனிதன், கமல்ஹாசன் நடித்த நாயகன் ஆகிய திரைப்படங்களுடன் போட்டியிட்டு, வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் (1992) தாய்மொழி, (1993) ராஜதுரை, (1995) கருப்பு நிலா, (1998) தர்மா ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. மொத்தமாக ராவுத்தர் பிலிம்ஸ் பேனரில் விஜயகாந்த் 6 திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இப்ராஹிம் ராவுத்தரின் பெயரில் இருந்த மற்றொரு தயாரிப்பு நிறுவனமான தமிழன்னை சினி கிரியேசன்ஸ் மூலம் விஜயகாந்த் நடிப்பில் முதலில் வெளியான திரைப்படம் பூந்தோட்ட காவல்காரன். 1988ம் ஆண்டு வெளியான இப்படம் வெள்ளிவிழா கண்டது. தொடர்ந்து 1989-ம் ஆண்டு பாட்டுக்கு ஒரு தலைவன், 1994-ம் என் ஆசை மச்சான், 1995ம் ஆண்டு காந்தி பிறந்த மண், 2000-ம் ஆண்டு சிம்மாசனம் ஆகிய திரைப்படங்களில் விஜயகாந்த் நடித்தார். தமிழன்னை சினி கிரியேசன்ஸ் தயாரித்த 5 திரைப்படங்களில் விஜயகாந்த் நடித்திருக்கிறார்.

இப்ராஹிம் ராவுத்தரின் ஐ.வி.சினி புரொடக்சன்ஸ் பேனரில் வந்த திரைப்படங்கள் அனைத்துமே விஜயகாந்த்துக்கு பெயர் சொல்லும் படங்களாகவே அமைந்தன. வசூல் ரீதியாக மட்டுமின்றி, மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்த படங்களாக அவை அமைந்திருந்தன. இந்த பேனரில் வந்த படம்தான் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்குநராக அறிமுகமான புலன் விசாரணை திரைப்படம். 1990-ல் வந்த இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். 1991ஆம் ஆண்டு விஜயகாந்தின் நூறாவது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் வெளியானது.

வணிக ரீதியாக பெரும்வெற்றி பெற்றதுடன், எம்.ஜி.ஆருக்கு 100 வது படம் ஒளி விளக்கு, சிவாஜி கணேசனுக்கு நவராத்திரி, ரஜினிகாந்த்துக்கு ராகவேந்திரா, கமல்ஹாசனுக்கு ராஜபார்வை என அவர்களின் நடிப்பில் வெளியான 100 வது படங்கள் தோல்வியடைந்திருந்த நிலையில் அவற்றை முறியடித்து, நடிகர்களின் நூறாவது படம் சரியாக ஓடாது என்ற நம்பிக்கையை தகர்த்தெறிந்தது கேப்டன் பிரபாகரன். 1993-ல் சக்கரைத் தேவன், 1998-ல் உளவுத்துறை என ஐ.வி.சினி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் திரைப்படங்களில் விஜயகாந்த் நடித்திருந்தார்.

பின்னர், கருத்து வேறுபாட்டின் காரணமாக இப்ராஹிம் ராவுத்தர் விஜயகாந்த் இருவரும் பிரிந்தனர்.

2015ம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இப்ராஹிம் ராவுத்தரை விஜயகாந்த் அடிக்கடி சென்று மருத்துவமனையில் பார்த்து வந்தார். சுயநினைவு இழந்து இப்ராஹிம் ராவுத்தர் மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டிருந்த நிலையில் அவருக்கும் விஜயகாந்துக்கும் இடையிலான நட்பு குறித்த கடிதம் ஒன்றை விஜயகாந்த் எழுதியிருந்தார்.

அக்கடித்ததில், “நண்பா, நீ உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாய் என்ற செய்தி கேட்டு வேதனையுடன் உன்னை உடல் நலம் விசாரிக்க வந்தேன். அங்கு நீ சுயநினைவு கூட இல்லாத நிலையில் கட்டிலில் இருந்ததை கண்டதும் என் மனம் பட்ட துயரத்தை நான் மட்டுமே அறிவேன். உன்னை கண்டவுடன் சிறுவயது முதல் நாம் கொண்ட உண்மையான நட்பும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற உறுதியோடு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமா உலகில் போராடி நாம் பெற்ற வெற்றி தோல்விகளும் என் கண் முன்னே வந்து சென்றன.

காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ மன கஷ்டங்களும், சந்தோஷங்களும் வந்து சென்றிருந்தாலும் என்றுமே உன்னை என் மனம் மறந்ததில்லை. இப்ராஹிம் நீ மீண்டும் நல்ல ஆரோக்கியத்தோடு நலம் பெற்று வர வேண்டும் என்று என் பிரார்த்தனையை கடவுளிடத்திலே வைக்கிறேன். நண்பா மீண்டு வா, எழுந்து வா” என்று எழுதியிருந்தார் விஜயகாந்த்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

கருப்பை வாரி பூசி ஜெயித்தவர் விஜயகாந்த் : மாரி செல்வராஜ்

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share