விஜய்காந்த் இறந்தார் என்பதை விட மக்கள் நெஞ்சில் நிறைந்தார் என்று வீரவணக்கம் செலுத்துகிறோம் என்று திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் இன்று (டிசம்பர் 28) காலை உயிரிழந்த விஜய்காந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நேரில் சென்று திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குறுகிய காலத்தில் எதிர்க்கட்சி தலைவராக தன்னுடைய பணியைத் தொடங்க கூடிய அளவிற்கு வளர்ந்தவர். அவரை நீண்ட காலத்திற்கு முன்பே அடையாளம் கண்டு அவருக்கு தந்தை பெரியார் விருதை கொடுத்தவர்கள் திராவிட கழகத்தினர்.
அவருக்கு விருது கொடுத்த போது நான் சொன்னேன், அவர் ஒரு கருப்பு வைரம். மிகப்பெரிய அளவிலே இருக்க கூடிய அந்த கருப்பு வைரம், தனித்தன்மையான மனிதர், இரக்கமுள்ள மனிதர், நல்ல நடிகர், சிறந்த அரசியல்வாதி என்பதையெல்லாம் தாண்டி, மனிதம் பொங்க கூடிய ஒரு மானிட நேயர்.
அப்படிப்பட்டவர்களின் இழப்பு அந்த கட்சிக்கு மட்டுமல்ல, அந்த குடும்பத்திற்கு மட்டுமல்ல. மனிநேயர்கள் அனைவரும் அவரை விரும்ப கூடிய அளவிற்கு அவரது வாழ்க்கை ஒரு நல்ல தொண்டர் வாழ்க்கையாகவே இருந்தது.
ஏழை, எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையோடு இருக்கக் கூடியவர். எல்லாவற்றையும் விட கருப்பு மனிதராக இருந்தாலும் நல்ல உள்ளம் படைத்தவராக இருந்தார்.
அப்படிப்பட்டவரின் மறைவு என்பது மிகவும் வேதனை தரக்கூடிய ஒரு நிகழ்வாகும். அவர் அரசியல் கட்சியை அமைத்த நேரத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று பெயர் வைத்து திராவிடர் என்ற உணர்வை காண்பித்தார்.
எனவே தான் நாங்கள் அடிக்கடி சொல்வது திராவிட கழகத்தில் அது ஒரு வகையான திராவிட கழகம் என்று. அப்படிப்பட்டவர் மறைந்தார் என்பதை விட மக்கள் நெஞ்சில் நிறைந்தார் என்று அவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் : அரசியல் கட்சியினர், திரையுலகினர் நேரில் அஞ்சலி!
இரண்டு ஆண்டுகளாக உயிரோடு பார்க்க முயற்சி செய்தும்… இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கம்!
