மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிசம்பர் 28) தேமுதிக சார்பில் குருபூஜையாக அனுசரிக்கப்பட்டது.
இதனையடுத்து அவரது நினைவிடமான கேப்டன் ஆலயத்தில் இன்று அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான தொண்டர்களும், ரசிகர்களும் குவிய தொடங்கினர். இதனால் தேமுதிக அலுவலகத்தை சுற்றியுள்ள கோயம்பேடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விஜயகாந்த் நினைவிடத்திற்கு நேரில் வருகை தந்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

அதன்படி திமுக சார்பில் அமைச்சர் சேகர்பாபு, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜக சார்பில் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன், சசிகலா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் விஜயகாந்த் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தடையை மீறி நடந்த பேரணி!
முன்னதாக விஜயகாந்த் நினைவு தினத்தை ஒட்டி கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் அலுவலகம் முதல் விஜயகாந்த் நினைவிடம் வரை இன்று காலையில் அமைதி பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், பேரணி நடத்தினால் போக்குவரத்து நெரிசல் எற்படும் என்று காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
எனினும் போலீஸாரின் தடையை மீறி கையில் ஜோதி ஏந்தி வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் பேரணி நடைபெற்றது. அதனை நினைவிடத்தில் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
ஊதிப்பெரிதாக்க வேண்டாம்!
பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டியில், “நடிகர் சங்கத்தின் தலைவராக விஜயகாந்த் இருந்தபோது, கலைஞருக்கு விழா எடுத்து தங்க பேனா வழங்கினார். கலைஞர் மறைந்தபோது வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த விஜயகாந்த், வடித்த கண்ணீரை திமுக என்றைக்கும் மறைக்காது.
போக்குவரத்து காரணங்களுக்காக விஜயகாந்த் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுக்கவில்லை. இந்த விவகாரத்தை ஊதிப்பெரிதாக்க வேண்டாம்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே சமூகவலைதளங்களில் விஜயகாந்துக்கு தலைவர்களும், பிரபலங்களும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் – கேப்டன் விஜயகாந்த் அவர்களை நினைவுகூர்கிறேன்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த அடையாளம் கொண்டு கோலோச்சியவரும், தனது உயரிய மனிதநேயப் பண்புகளாலும், ஈகைப் பெருங்குணத்தாலும் தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றவருமான தேமுதிக தலைவர், விஜயகாந்த் நினைவு நாளான இன்று, அவரின் பொதுவாழ்வின் சாதனைகளை நினைவுகூர்கிறேன்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்
விஜயகாந்த் இனிய குணத்தாலும் பழகும் பண்பாலும் நாங்கள் பரஸ்பரம் அன்பு பாராட்டும் நண்பர்களானோம். திரைத் துறையில் நாயகனாக அவர் சாதித்துக் காட்டிய விதத்தில் சக நடிப்புக் கலைஞர்களின் வியப்புக்குரியவராகத் திகழ்ந்தார்.
நடிகர் சங்கத் தலைமைப் பொறுப்பில் அவர் இருந்தபோது செய்த பெரும்பணிகளைத் திரைத் துறையைச் சார்ந்த எவரும் எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.
தேமுதிக கட்சியைத் துவக்கி தமிழக அரசியலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் வரை உயர்ந்தார்.
தனிப்பட்ட முறையிலும் தனது சமூக உணர்வாலும், மனிதர்களிடையே சமத்துவம் பாராட்டும் பாங்காலும் ஏராளமான இதயங்களை வென்றெடுத்து, சாதனை புரிந்தார்.
அவரது மனிதாபிமானச் செயல்கள் இன்றும் அவரை லட்சக்கணக்கான இதயங்களில் நிலை நிறுத்திவைத்துள்ளன.
களப்பணியிலும் கலை வானிலும் நிலவாக ஜொலித்த அவர்தம் பெருமை என்றும் மங்காது. செய்ய வேண்டிய எத்தனையோ காரியங்களை மனதில் சுமந்திருந்த அவர், அகாலத்தில் நம்மையெல்லாம் நீங்கியது துயரமே எனினும், அவர் செய்து முடித்த செயல்கள் அவரை நம்மிடையே இன்னும் உயிர்ப்போடு வைத்திருப்பது ஆறுதல் தருகிறது.
அதே போல இந்த நாளில் என்னால் இங்கு நேரில் இருக்க முடியாத சூழ்நிலையால் வருத்தம் இருப்பினும், மானசீகமாக இங்கே இருக்கிறேன் என்பதில் ஆறுதல் கொள்கிறேன்.
நடிகர் ரஜினிகாந்த்
என் அன்புக்குரிய கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவருக்கு என் நினைவஞ்சலி.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
தனது கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி, மக்களை மகிழ்வித்த ஆகச்சிறந்தத் திரைக்கலைஞர். இயக்குநராகவும், நடிகராகவும் பலருக்கு அறிமுக வாய்ப்புகளைக் கொடுத்து, தன்னோடு மற்றவர்களும் மேலேறி வர வேண்டுமெனும் நல்நோக்கத்தோடு கைதூக்கிவிட்ட குணாளர்.
தான் சார்ந்திருக்கிற நடிகர் சங்கம் பெருங்கடனில் மூழ்கித் தவித்தபோது தனது கடினமான உழைப்பாலும், நிர்வாகத்திறனாலும் மீட்டெடுத்த பெருந்தகை. ஏழை எளிய மக்கள் எவரும் பசி, பட்டினியாக இருக்கக் கூடாதெனும் உயர்ந்த எண்ணம் கொண்டு, தன்னை நாடி வந்தவர்களுக்கெல்லாம் உணவிட்ட மனிதநேயவாதி.
எந்த நிலையிலும் தன்னிலை மாறாது உள்ளன்போடு எல்லோரிடமும் பழகிய பண்பாளர். விஜயகாந்த் நினைவு நாளில் அவரது நற்செயல்பாடுகளைப் போற்றி, என்னுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நினைவு தினத்தை ஒட்டி, பாஜக மூத்த தலைவர்களுடன், விஜயகாந்த் நினைவிடத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு அஞ்சலி செலுத்தி வணங்கினோம்.
அன்பும், பண்பும், அறமும் மிகுந்த விஜயகாந்த், வெள்ளை மனமும், கனிவான புன்னகையும், கொடுத்துச் சிவந்த கரங்களும், தம் அடையாளமாகக் கொண்டு திகழ்ந்தவர்.
‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்’ என்ற குறளுக்கு இலக்கணமாக, சிறந்த மனிதராக நம்மிடையே வாழ்ந்து மறைந்த விஜயகாந்த் புகழ், என்றும் நிலைத்திருக்கும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
உதவி கேட்டு வரும் ஏழை, எளியோருக்கு உதவும் குணம் படைத்தவராகவும், தமிழ் மற்றும் தமிழக மக்களின் மீது அளவு கடந்த அன்பை கொண்டிருந்தவராகவும் திகழ்ந்த விஜயகாந்த் புகழ் எக்காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பாஜக – பாமக கூட்டணி முறிவு? – ராமதாஸ் பேச்சால் சலசலப்பு!
“விருப்பமில்லையென்றால் வெளியேறு” : மேடையில் ராமதாஸ் – அன்புமணி இடையே வார்த்தை மோதல்!