ஸ்டாலினை நம்பி வந்தவர், முத்துசாமியை தோற்கடித்தவர்: யார் இந்த வி.சி.சந்திரகுமார்?

Published On:

| By christopher

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையடுத்து வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் திமுகவே போட்டியிடும் என்று நேற்று (ஜனவரி 10) இரவு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிக்க, இன்று (ஜனவரி 11) காலை திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் சந்திரகுமார் என்று அறிவித்தார்.

திமுக தரப்பில் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்களான ஈரோடு மாவட்ட துணை செயலாளரான செந்தில் குமார், அவரது அண்ணன் மகனும், ஈரோடு தெற்கு மாவட்ட அமைப்பாளருமான திருவாசகம், கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த ஈரோடு மாவட்ட துணைச் செயலாளர் செல்லப் பொன்னி மனோகரன், இதே தொகுதியில் தேமுதிக எம்எல்ஏ-வாக இருந்து திமுகவில் தற்போது இணை கொள்கைப் பரப்பு செயலாளராக இருக்கும் முதலியார் சமூகத்தைச் சேர்ந்த வி.சி.சந்திரகுமார் மற்றும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த குறிஞ்சி சிவகுமார் ஆகியோர் முயற்சி மேற்கொண்டனர்.

இந்த நிலையில் தான் முதல்வர் ஸ்டாலினால் திமுக வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார் வி.சி.சந்திரகுமார்.

ஈரோட்டைச் சேர்ந்தவரான இவர், விஜயகாந்த் ரசிகர் மன்ற தலைவராக இருந்து, பின்னர் தேமுதிக சார்பில் 2006 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.

எனினும் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 10,644 வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.

விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் என தேமுதிக தலைமையின் மிக நம்பிக்கைக்குரிய ஒருவராக இருந்தார். எம்.எல்.ஏ மட்டுமின்றி கட்சி கொறடாவாகவும், கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் இருந்தார். சட்டசபையில் கூட விஜயகாந்த் இல்லாத நிலையில் சந்திரகுமார்தான் கட்சியை நடத்தி வந்தார்.

எனினும் 2016ஆம் ஆண்டு அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என கூறி மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி அமைத்தார் விஜயகாந்த். அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வி.சி.சந்திரகுமார் கோரிக்கை வைத்தார். இதை விஜயகாந்த் ஏற்கவில்லை. அப்போது பிரேமலதாவின் வற்புறுத்தலின் பேரில்தான் தேமுதிக மக்கள் நலக் கூட்டணியில் இணைந்ததாக சந்திரகுமார் உள்ளிட்டவர்கள் கருதினர்.

திமுக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற கருத்து தேமுதிகவில் மேலோங்கியிருந்ததை அறிந்த அப்போதைய, திமுகவின் பொருளாளர் ஸ்டாலின், தேமுதிகவில் அதிருப்தியில் இருப்பவர்களைத் தொடர்புகொள்ளுமாறு இப்போதைய அமைச்சர் எ.வ.வேலுவுக்கு அறிவுறுத்தினார்.

அதன்படி சந்திரகுமார், பார்த்திபன் உள்ளிட்டோருடன் பேசிய எ.வ.வேலு, தேமுதிகவுக்குள் இருக்கும் அதிருப்தியாளர்களை ஒன்று கூட்டி, ‘மக்கள் தேமுதிக’ என்ற அமைப்பை உருவாக்க வேலை செய்தார்.

இந்த மக்கள் தேமுதிக 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரித்தது. அக்கட்சியில் இருந்து திமுக கூட்டணியில் சந்திரகுமார் உள்ளிட்ட மூவருக்கு 2016 சட்டமன்ற திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது. ஆனால், மூவரும் தோல்வியை தழுவினர்.

அதனைத்தொடர்ந்து அதே ஆண்டு ஜுன் 16-ஆம் தேதி சென்னை, கோபாலபுரத்தில் அப்போது திமுக தலைவராக இருந்த கலைஞரை நேரில் சந்தித்து பேசினர். தொடர்ந்து மக்கள் தேமுதிக அமைப்பை திமுகவுடன் இணைப்பதாக அறிவித்தனர். இதன் பின்னணியில் இருந்தவரும் ஸ்டாலின் தான்.

பிற கட்சிகளில் இருந்து தன்னை நம்பி வந்தவர்களை ஸ்டாலின், கைவிட்டதில்லை. இதுகுறித்து பரம்பரை திமுகவினருக்கு வருத்தமும் உண்டு. என்றபோதும், திமுக கொள்கை இணை பரப்பு செயலாளராக செயல்பட்டு வரும் வி.சி. சந்திரகுமாரை இன்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக வேட்பாளராக அறிவித்துள்ளார் ஸ்டாலின்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலியார் சமூக வாக்குகள் அதிகம் இருக்கும் நிலையில், அதனை குறி வைத்து சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இன்று (ஜனவரி 11) அறிவாலயத்தில் வேட்பாளர் சந்திரகுமாரை ஈரோடு மாவட்டச் செயலாளரான முத்துசாமி அறிவாலயத்துக்கு அழைத்து வந்து முறைப்படி முதல்வரிடம் அறிமுகப்படுத்தினார்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 2011 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முத்துசாமியை, அதிமுக கூட்டணியில் நின்று தோற்கடித்தவர்தான் சந்திரகுமார்.

அந்த தேர்தலில் திமுகவின் முத்துசாமி 58 ஆயிரத்து 522 வாக்குகள் பெற்றார். ஆனால், சந்திரகுமார் 11 ஆயிரம் வாக்குகள் அதிகமாக 69 ஆயிரத்து 166 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

2011-இல் தன்னை தோற்கடித்த சந்திரகுமாரை, 2025 தானே முன்னின்று ஜெயிக்க வைத்து அறிவாலயத்துக்கு கூட்டிச் செல்ல வேண்டிய பொறுப்பேற்றுள்ளார் முத்துசாமி.
‘ஈரோடு கிழக்கிலும் உதயசூரியன் உதிக்கும்’ என சந்திரகுமாரை வாழ்த்தி ஈரோட்டுக்கு அனுப்பியுள்ளார் ஸ்டாலின்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி, வேந்தன்

பணி ஓய்வுக்குப் பின் வாழ்க்கையை சந்தோஷமாக கழிக்க வேண்டுமா?

ஈரோடு கிழக்கு : விலகிய காங்கிரஸ்… திமுக வேட்பாளரை அறிவித்தார் ஸ்டாலின்

கிச்சன் கீர்த்தனா : சால்டட் கேரமல் பொங்கல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share