மியாட் மருத்துவமனையிலிருந்து விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதையடுத்து, வீடு திரும்பினார்.
தேமுதிக பொதுச் செயலாளரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் கண்டதை அடுத்து, அக்டோபர் 2ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதனிடையே கடந்த 6ஆம் தேதி இரவு விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தேமுதிக விளக்கம் அளித்தது. சீரான திட்டமிடப்பட்ட தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கதிரியக்க மதிப்பீடு செய்யப்பட்டதாக மியாட் மருத்துவமனை தெரிவித்தது.
இந்த நிலையில் சிகிச்சைக்குப் பிறகு விஜயகாந்த் இன்று (அக்டோபர் 9) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மருத்துவக் குழுவினரின் தொடர் கண்காணிப்பின் மூலம் அனைத்து கதிரியக்கப் பரிசோதனைகளிலும் விஜயகாந்த் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்தது. ஆகவே, இன்று சென்னை மியாட் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் வீடு திரும்பியதையடுத்து, தேமுதிக நிர்வாகிகளும் தொண்டர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
**எழில்**�,