காங்கிரஸ் கட்சியில் தலைமை பதவிக்கு பெண்கள் வரமுடியாத சூழல் உள்ளது என்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய விஜயதரணி இன்று (பிப்ரவரி 24) தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி இன்று டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயதரணி,
“காங்கிரஸ் கட்சியில் தலைமை பதவிக்கு பெண்கள் வரமுடியாத சூழல் உள்ளது. காங்கிரஸ் சார்பில் மூன்று முறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் பதவி என்னை விட ஜூனியருக்கு தான் கொடுத்துள்ளார்கள்.
இதனால் நிறைய நாட்களாகவே கடுமையான அதிருப்தியில் இருந்தேன். 1999-ல் இருந்து மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருகிறேன். நான் ஒரு சுப்ரீம் கோர்ட்டு ப்ராக்டீசிங் லாயர். நிச்சயமாக நாடாளுமன்றத்தில் என்னுடைய பணிகளை தொடர வேண்டும் என்று கடந்த முறை கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். ஆனால், கடந்த இடைத்தேர்தலில் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்தமுறையும் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்காது என்று தான் நினைக்கிறேன்.
இந்தசூழ்நிலையில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில், நிறைய பணிகள் நடைபெறாமல் உள்ளது. அந்த தொகுதியை சீர் தூக்கி பிடிக்கும் இடத்தில் எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் இல்லாத ஒரு நிலை தான் உள்ளது. இப்போது இருக்கிற நாடாளுமன்ற உறுப்பினரும், இதற்கு முன்பிருந்த உறுப்பினர்களும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னை போன்றவர்கள் நாடாளுமன்ற தொகுதியை உயர்த்திப் பிடிக்க முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை. இந்தியா முழுவதும் நாற்கர சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், கன்னியாகுமரி தொகுதியில் நாற்கர சாலை பணிகள் நடைபெறவில்லை.
கன்னியாகுமரியில் அதிகளவில் மீனவர்கள் வசிக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு மீனவர்கள் கொல்லப்படுவது ஒரு சதவிகிதம் கூட இருக்க வாய்ப்பில்லை. மீனவர்கள் பிரச்சனையில் நிரந்தர தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
மீனவர்கள் பிரச்சனைக்கு பாஜக எடுத்த முயற்சி என்பது மிகப்பெரிய முயற்சியாகும். பிரதமர் அறிவித்த ரேஷன் திட்டங்கள் நாடு முழுவதும் சென்றடைந்துள்ளது. தமிழ்நாடு, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் மட்டும் இந்த திட்டங்களை ஏற்க மறுக்கிறார்கள்.
பாஜக அரசின் திட்டங்கள் என்பது கவர்ச்சிகரமான திட்டங்களாக இல்லாமல் நடைமுறைப்படுத்தும் திட்டங்களாக உள்ளன. அது எல்லாமே மக்களை சென்றடைகிறது. வட இந்தியாவில் பாஜகவிற்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதற்கு காரணம் இந்த திட்டங்கள் அந்த மக்களை சென்றடைந்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இந்த திட்டங்களையும் ஏற்க மறுக்கிறார்கள், மொழியும் பிரச்சனையாக இருக்கிறது.
ஆகையால் மொழி பிரச்சனையில் இந்த திட்டங்கள் நமக்கு எந்தளவுக்கு பயனடைந்திருக்கிறது என்று தெரியவும் இல்லை, புரியவும் இல்லை. நாட்டை வழிநடத்தக்கூடிய அகில இந்திய அளவிலும், உலக அளவிலும் பெரிய தலைவர் மோடி. அவருடைய தலைமையின் கீழ் இந்த நாடு மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது.
இஸ்லாமிய பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, முத்தலாக் போன்ற சட்டங்களைக் கொண்டுவந்துள்ளார்கள். இதுபோன்ற சட்டங்களை காங்கிரஸ் கட்சி செய்ய முயற்சிக்கவில்லை. இந்திய அளவில் இஸ்லாமிய பெண்களின் வாக்குகள் பாஜகவுக்கு கிடைத்து வருகிறது. ஆகையால், மீண்டும் மோடி தலைமையில் இந்தியா இயங்க வேண்டும் என்ற விருப்பத்தோடு பாஜகவில் இணைந்துள்ளேன். காங்கிரஸ் கட்சி தலைமைக்கு என்னுடைய ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டேன்” என்றார்.
மக்களவை தேர்தலில் போட்டியிட பாஜகவில் உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விஜயதரணி, “அதுகுறித்து கட்சியின் தலைமை தான் முடிவெடுக்கும். கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு நான் இணங்கி செல்வேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜகவில் இணைந்த விஜயதரணி- பறிபோகும் எம்.எல்.ஏ. பதவி- கட்சித் தாவல் தடைச் சட்டம் சொல்வது என்ன?