குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் சி.பி.ஐ-யால் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் இன்று(செப்டம்பர் 9) காலை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
தமிழகத்தில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, தடைவிதிக்கப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை சிபிஐ விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், சீனிவாச ராவ், மாதவ் ராவ் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ சிறப்பு நீதி மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி ரமணா, முன்னாள் டிஜிபி டிகே ராஜேந்திரன், முன்னாள் சென்னை கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட 27 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது..
பின்னர் இந்த வழக்கு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு சென்ற மாதம் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி நீதிபதி சஞ்சய் பாபா முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ணன் பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் மற்றும் மாதவ் ராவ், உமாசங்கர் குப்தா ஆகிய ஐந்து நபர்கள் ஆஜராகியிருந்தனர்.
இதனையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டிகே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட 27 நபர்கள், செப்டம்பர் 9-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டிகே.ராஜேந்திரன் ஆகியோர் ஆஜராகினர்.
முன்னதாக விஜயபாஸ்கர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் “ அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு போடப்பட்ட தவறான வழக்கு இது. நீதி மீது பெரும் நம்பிக்கை உள்ளது. நீதிமன்றத்தில் சட்டரீதியாக வாதாடி, நிரபராதி என்பதை நிரூபிப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
முன்மாதிரியான தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி எங்கே? : மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்!
ரூ.12,381 கோடி வாடகை பாக்கி… கிண்டி ரேஸ் கோர்ஸுக்கு சீல்!
மதுரைக்கு பத்தாயிரம் பட்டா… உதயநிதியின் பிரம்மாண்ட விழாவில் மூர்த்தியின் போராட்டம்!