குட்கா ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் முன்னாள் டிஜிபி உட்பட 21 பேர் மீது சிபிஐ இன்று (நவம்பர் 23) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள், உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டு, அதற்காக கோடிக்கணக்கில் லஞ்சமாக வாங்கியதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது புகார் எழுந்தது.
அதன் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள், குட்கா சப்ளை செய்யப்பட்டதாக கூறப்பட்ட செங்குன்றம் குடோன் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினார்கள்.
அப்போது கண்டெடுக்கப்பட்ட ஒரு டைரியில் சுமார் ரூ.40 கோடி வரை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் இதில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், பல்வேறு துறைகள் ஆகியவற்றுக்குத் தொடர்பு இருப்பது அம்பலமானது.
இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்ட நிலையில், இதைத் தொடர்ந்து, 2018-ம் ஆண்டு, நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதன்பின்னர் வந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் தேர்தலையொட்டி குட்கா ஊழல் வழக்கு மொத்தமாக கிடப்பில் போடப்பட்டது.
இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட 12 பேரிடம் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு சி.பி.ஐ அதிகாரிகள் கடிதம் எழுதி இருந்தனர். அதற்கு அரசும் அனுமதி கொடுத்தது.
கூடுதலாக ஒரு குற்றப்பத்திரிக்கை!
இந்நிலையில் தற்போது, சென்னை சிபிஐ கூடுதல் நீதிமன்றத்தில் குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக கூடுதலாக ஒரு குற்றப்பத்திரிக்கையை சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர்.
இதில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் முன்னாள் டி.ஜி.பி-க்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 21 பேர்மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.
முன்னாள் அமைச்சரான விஜயபாஸ்கர் நேற்று டெல்லி முகாம் அலுவலகத்தில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகனை சந்தித்து இருந்தார்.
ஆனால் அதற்கு அடுத்த நாளே அவர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
தேர்தல் ஆணையர் நியமனம் : மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் காட்டம்!