அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகையின் நகலைக் கேட்டு அமலாக்கத்துறை சார்பில் இன்று (மார்ச் 23) மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2021ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தொடர்ச்சியாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது சோதனைகள் நடத்தப்பட்டது.
அதில், கடந்த 2016-21 அதிமுக ஆட்சிக் காலத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள், உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டதாகவும், அதற்காக பெரும் தொகையை லஞ்சமாக பெற்றதாகவும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
குட்கா விவகாரத்தில், அப்போதைய காவல்துறை டிஜிபியாக இருந்த டி.கே.ராஜேந்திரனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற பேச்சும் இருந்தது.
இதனையடுத்து, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி திமுக எம்.எல்.ஏ. அன்பழகன், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
பின்னர் சிபிஐ வசம் சென்ற இந்த வழக்கில் குட்கா வியாபாரி மாதவ ராகவ், கலால்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, 2022 ஜூலை மாதம், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்ட 12 பேரிடம் விசாரணை நடத்த அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு சிபிஐ அதிகாரிகள் கடிதம் எழுதியிருந்தனர்.
தொடர்ந்து, அவர்களிடம் விசாரித்த சிபிஐ அதிகாரிகள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்ட 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கின் மீதான விசாரணைக்கு தற்போது ஆளுநர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, விஜயபாஸ்கர் மீதான விசாரணை தொடங்கியுள்ளது.
அமலாக்கத்துறையின் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் விஜயபாஸ்கரும் விசாரணை வளையத்திற்குள் வருகிறார்.
இதனைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்னர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தினர்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக, புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையின் நகலைக் கேட்டு அமலாக்கத்துறை இன்று மனுத்தாக்கல் செய்துள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”ஆளுநரை பதவி நீக்கம் செய்யுங்கள்” : ஜனாதிபதிக்கு திருமாவளவன் வலியுறுத்தல்!
சுற்றி நின்று ஊரே பார்க்க… ஜாலியாக ஆடிய கோலி… என்ன பாட்டுக்குன்னு பாருங்க!