விஜய் ஓட்டு யாருக்கு?

Published On:

| By admin

இன்று காலையிலேயே நடிகர் விஜய் தனது ஜனநாயக கடமையை ஆற்றிய நிலையில் அவர் யாருக்கு வாக்களித்தார் என்ற விவாதம் எழுந்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (பிப்ரவரி 19) காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை போன்ற இடங்களில் மந்தமாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், திருச்சி உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தற்போதைய காலகட்டத்தில், அரசியல் பிரபலங்களைப் போல சினிமா பிரபலங்களின் வாக்குகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, ரஜினி, விஜய் போன்ற ரசிகர்கள் பட்டாளம் கொண்டவர்கள் யாருக்கு வாக்களிக்கின்றனர் என்ற விவாதம் தேர்தல் சமயங்களில் எழுவது வழக்கம். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது நடிகர் விஜய் கருப்பு, சிவப்பு நிற சைக்கிளில் வந்து வாக்களித்தார்.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட பல சொகுசு கார்களை வைத்திருக்கும் விஜய் சைக்கிளில் வந்தது ஏன்? என்று கேள்வி எழுந்தது. பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் குறிப்பிடும் வகையில் அவர் சைக்கிளில் வந்தார் என்றும் சிவப்பு, கருப்பு நிற சைக்கிளில் வந்ததால் திமுகவுக்கு வாக்கைச் செலுத்தியிருக்கலாம் என்றும் யூகத்தின் அடிப்படையில் பல விவாதங்கள் எழுந்தன.

இந்தச்சூழலில் இன்றைய உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்களிக்க நடிகர் விஜய் சிவப்பு நிற காரில் கருப்பு மாஸ்க் அணிந்து வந்து வாக்களித்தார். காலை வீட்டிலிருந்து காரில் அவர் கிளம்பியதும் அவரது ரசிகர்கள் இருசக்கர வாகனத்தில் அவரை பின் தொடர்ந்து வந்தனர். வாக்குச்சாவடிக்கு வந்ததும் பத்திரிகையாளர்களும் விஜய்யை சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்கத் தொடங்கினர்.

வாக்குச்சாவடிக்குள்ளும் விஜய்யை நெருங்கி கூட்டமாக நின்றனர். இதனால் விஜய் சிறிது நேரம் வாக்களிக்காமல், அவர்களைச் சிறிது தூரம் நகரச் சொல்லி விட்டு அதன் பிறகு தான் வாக்களித்தார்.

இந்தச்சூழலில் அவர் யாருக்கு வாக்களித்தார் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடுவதால் அவர்களுக்கு வாக்களித்திருக்கலாம் என்று சொல்லப்பட்டது.

ஆனால் திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே நீலாங்கரையில் களத்தில் உள்ளன. இதனால் அரசியல் கட்சியினருக்குத்தான் விஜய் வாக்களித்திருப்பார் என்பது உறுதியானது. இந்தசூழலில், அவர் திமுகவுக்கு வாக்களித்திருப்பதாக விஜய் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

**-வணங்காமுடி, பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share