தமிழக வெற்றிக் கழகத்துக்கு (Vijay TVK Symbol) சின்னம் வந்துவிட்டது; அந்த சின்னத்தை பார்த்து நாடே அஞ்சப் போகிறது என்று அக்கட்சியின் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளரும் கொங்கு மண்டல அமைப்புச் செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் தமது ஆதரவாளர்களிடம் நேற்று டிசம்பர் 7-ந் தேதி கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: வெகுவிரைவில் நமக்கு சின்னம் கிடைக்கப் போகிறது.. எனக்கு தெரியும்… ஆனால் வெளியே சொல்லக் கூடாது… ஆணை வரும் வரையில்..
அந்த சின்னத்தைப் பார்த்ததற்கு பிறகுதான் நாடே வியக்கப் போகிறது.. நாடே அஞ்சப் போகிறது. ஏன் என்று சொன்னால் இவரை (விஜய்யை) வெல்வதற்கு இனி தமிழகத்தில் எந்த ஒரு இயக்கமும் இல்லை..
நாமக்கல்லில் (எடப்பாடி பொதுக் கூட்டத்தில்) நமது கொடி அசைந்து கொண்டிருந்தது.. அப்போது, ‘பாருங்கள்.. பிள்ளையார் சுழி போட்டுவிட்டார்கள்’ என்றார்கள்.. இப்போது பிள்ளையார் சுழி அல்ல.. வேறு சுழி போடப்பட்டுள்ளது.
எல்லோருடைய முதுகிலேயும் ஏறி சவாரி செய்யலாம் என பலர் கனவு கண்டார்கள்.. ஆனால் மக்களாகிய உங்களுடைய சக்தி விஜய்யை தமிழ்நாட்டின் முதல்வராக்கும்; வெற்றியைத் தரும்.
ஈரோட்டில் விஜய் பங்கேற்கும் கூட்டத்தைப் பார்த்த பிறகு கொங்கு மண்டலமே வியக்கப் போகிறது. வரலாற்றைப் படைக்கக் கூடியவர்கள் நீங்கள்.. வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நீங்கள்.
ஆண்டவர்களே ஆள வேண்டுமா? மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கக் கூடாதா? ஏன் ஆட்சிக்கு வரக் கூடாது? தமிழகத்திலே நல்லாட்சியை நடத்துவதற்கு புதிய முகத்தை தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.. அந்த முகம் கிடைத்துவிட்டது..
நான் என்று ஒருவன் நினைத்தால் ஆண்டவன் தான் என்று காட்டிவிடுவான். ஆண்டவன் இருக்கிறான்.. ஆளப் போவது விஜய்தான்.. இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.
