தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் கூட்டம் மற்றும் மாநாடுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறப்படுவதாக வெளியான செய்திகளை அக்கட்சியின் ஐடி விங் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.
தவெக ஐடி-விங் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் மற்றும் மாநாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து பல கோடி நிதி பெற்றதாகக் கூறி, நடிகர் விஜய் மற்றும் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படுவதாகவும், அவர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற அவதூறுகள்!
தவெகவிற்கு மக்களிடம் கிடைத்து வரும் பேராதரவைச் சிதைக்கவே இத்தகைய போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன. தவெக மாநாட்டின் பிரம்மாண்ட வெற்றியும், இளைஞர்களிடையே எழுந்துள்ள எழுச்சியும் ஆளும் தரப்பைத் தூக்கமிழக்கச் செய்துள்ளது. அதன் வெளிப்பாடே இத்தகைய போலிச் செய்திக் கார்டுகள். ஆளுங்கட்சியினரே! அதிகார பலத்தை வைத்துக் கொண்டு பொய்களைப் பரப்புவதை நிறுத்திவிட்டு, மக்கள் பணிகளில் கவனம் செலுத்துங்கள். தமிழக மக்கள் எதார்த்தத்தையும், உங்கள் அரசியல் நாடகங்களையும் நன்கு உணர்ந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.









