சின்னத்திரையில் இருந்து மீண்டும் ஒரு ‘ஹீரோ’!

Published On:

| By uthay Padagalingam

சின்னத்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்களை பெரிய திரைக்கு அழைத்து வருவது அவ்வப்போது நிகழ்கிற விஷயம். இந்தியில் ஷாரூக்கான், மாதவன் ஒருகாலத்தில் சீரியலில் தலைகாட்டியவர்கள் தான். KPY Bala Turns Hero

தமிழிலும் சந்தானம், சிவகார்த்திகேயன், இர்பான், கவின் என்று சிலர் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு இடம்பெயர்ந்திருக்கின்றனர். அவ்வளவு ஏன், ’படையப்பா’ காலத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ‘பெப்சி உங்கள் சாய்ஸ்’ உமாவை நடிக்க வைக்கிற முயற்சிகள் நிகழ்ந்திருக்கின்றன. KPY Bala Turns Hero

ஏற்கனவே ஒரு துறையில் பிரபலமாக இருப்பவரை சினிமாவுக்கு அழைத்து வந்து முகம் காட்டுவதென்பது சம்பந்தப்பட்ட படக்குழுவின் ‘புரோமோஷன்’ வேலைகளைப் பாதியாகக் குறைத்துவிடும். சின்னத்திரை பிரபலங்களுக்கென்று சமூகவலைதளங்களில் பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிற சூழலில் அது ‘எளிதான’ அணுகுமுறையும் கூட.

அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் இருந்து திரையுலகுக்கு இன்னொரு ‘ஹீரோ’ வந்திறங்குகிறார். அவர் வேறு யாருமல்ல, கேபிஒய் பாலா.

’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களுக்கு அறிமுகமான பாலன் ஆகாஷ் என்கிற பாலா, தன்னுடைய தோற்றம், உடல்மொழி, வசன உள்ளடக்கம் மற்றும் உச்சரிப்பு வழியாக நகைச்சுவை ஊட்டியவர். ’திரைப்படங்களிலும் அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தட்டும்’ என்று சில இயக்குனர்கள் அவரைத் தமது படங்களில் இடம்பெற வைத்தனர்.

2018இல் வெளியான ‘ஜுங்கா’வில் விஜய் சேதுபதியோடு அவரைத் தோன்றச் செய்திருந்தார் இயக்குனர் கோகுல். தொடர்ந்து தும்பா, சிக்சர், காக்டெய்ல், லாபம், ஆன்ட்டி இண்டியன், நாய் சேகர், தேஜாவூ, கணம், ரிப்பீட் ஷு, பிகினிங், ரன் பேபி ரன், நண்பன் ஒருவன் வந்தபிறகு என்று சுமார் இரண்டு டஜன் படங்களில் தலைகாட்டியிருந்தார். அவற்றில் மிகச்சில படங்களில் அவரது பாத்திரங்கள் ரசிக்க வைத்தன. மற்றவை அனைத்தும் ‘கலாய்த்தல்’ பாணியில் வசனம் பேசிவிட்டுச் செல்வதாகவே இருந்தன.

இந்த படங்கள் வெளியாகிற காலகட்டத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், சில மேடைகளில் தனது நடனத்திறமையை வெளிப்படுத்தியிருந்தார் பாலா. குறிப்பாக, ஆஹா ஓடிடி தளத்தில் வந்த ’சர்கார் வித் ஜீவா’ நிகழ்ச்சியில் அசோக் ராஜா, பாபா பாஸ்கர் உள்ளிட்ட டான்ஸ்மாஸ்டர்கள் பங்கேற்ற எபிசோடில் நகைச்சுவையாளராக வந்து அமர்க்களப்படுத்தியிருந்தார். பிரபுதேவாவை கௌரவிக்கும் விதமாக உருவாக்கப்பட்ட மற்றொரு நிகழ்ச்சியில், அவரோடு இணைந்து சில நொடிகள் ஆடியிருந்தார்.

‘இவரே ஒரு டான்ஸ் கொரியோகிராஃபர் ஆகிடுவார் போல’ என்று நாம் நினைத்தபோது, நாயகனுக்கான தோற்றத்தோடு சில நிகழ்ச்சிகளில் ‘பாந்தமாக’ பேசத் தொடங்கினார். ‘ஏன் இந்த ட்ரான்ஸ்பர்மேஷன்’ என்று ரசிகர்கள் யோசித்து முடிப்பதற்குள், இப்போது அவர் நாயகனாக அறிமுகமாகிற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ஜெய் கிரண் தயாரிப்பில், ‘ரணம் – அறம் தவறேல்’ படத்தைத் தந்த ஷெரீஃப் இயக்கத்தில், விவேக் மெர்வின் இசையமைப்பில் தயாராகிறது இப்படம். #பாலா01 என்று விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுவே, ஒரு நாயகனாகக் களமிறங்க மிகுந்த திட்டமிடலையும் அதீத கவனத்தையும் அவர் தரப்பு வெளிப்படுத்துவது நன்றாகத் தெரிகிறது.

‘ரணம் – அறம் தவறேல்’ திரைப்படம் ’ஆக்‌ஷன் த்ரில்லர்’ வகைமையில் அமைந்திருந்தது. அதனைத் தந்த இயக்குனரின் படம் என்பதால், இப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் இருக்க வாய்ப்பிருக்கிறது. KPY Bala Turns Hero

இதில் நாயகியாக நமிதா கிருஷ்ணமூர்த்தி நடிப்பதாகச் சொல்லப்படுகிறது. ட்ரிபிள்ஸ், நவம்பர் ஸ்டோரி, ஆனந்தம், ஃபால் ஆகிய வெப்சீரிஸ்களில் நடித்து ‘யார் இவர்’ என்று நோக்க வைத்த இவர், சந்தானத்தின் ‘குலுகுலு’ படத்திலும் நடித்திருக்கிறார். இவரது வரவு, இந்தப் படம் ‘ரொமான்ஸ்’, ‘காமெடி’ கலந்த ஒரு ‘விஷுவல் ட்ரீட்’ ஆக இருக்குமென்ற எதிர்பார்ப்பைத் தருகிறது. ‘அதெப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடியும்’ என்பவர்கள், நமீதாவின் ‘இன்ஸ்டா’ பக்கத்தைப் பார்க்கலாம்.

’டான்ஸ் இருக்கு, காமெடி இருக்கு, சென்டிமெண்ட் நடிப்பும் இருக்கு, கொஞ்சம் ரொமான்ஸையும் ஆக்‌ஷனையும் கலந்து செமையான கமர்ஷியல் படங்களை தந்துற வேண்டியதுதானே’ என்று சொல்கிற அளவுக்கு எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது பாலாவின் ‘ஹீரோ’ அறிமுகம். வெல்கம்! KPY Bala Turns Hero

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share