தமிழக முதல்வர் விஜய் 3 நாள் அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை முதலமைச்சர் விஜய் நேரில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தலைநகர் டெல்லியில் நாளை நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் இன்று டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கி உள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் இன்று மாலை அவர், தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, மாலை 6:30 மணியளவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸின் முக்கியத் தலைவர்களையும் அவர் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. சோனியா காந்தியின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 2 அமைச்சர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, கடந்த முறை முதல்வர் விஜய் டெல்லி சென்றிருந்த போதும் சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் அந்தச் சந்திப்பு அப்போது ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
