மும்மொழி கொள்கை- திமுக பாஜக செட்டிங்: விளாசிய விஜய்

Published On:

| By Kavi

மும்மொழிக் கொள்கையை தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக எதிர்க்கும் என்று விஜய் கூறியுள்ளார். Vijay slams DMK BJP

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று (பிப்ரவரி 26) மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் பேசிய தவெக தலைவர் விஜய், “இப்போது புதிதாக ஒரு பிரச்சினையை கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். அது மும்மொழி கொள்கை. அதாவது இந்த கொள்கை இங்கு செயல்படுத்தவில்லை என்றால் கல்விக்கான நிதியை மாநில அரசுக்கு கொடுக்கமாட்டாங்களாம். இது எல்.கே.ஜி., யூ.கே.ஜி. பசங்க சண்டை போல் உள்ளது.

கொடுக்க வேண்டியது அவர்களுடைய கடமை. வாங்க வேண்டியது இவர்களுடைய உரிமை. ஆனால் இவர்கள் இரண்டு பேரும், அதான் இந்த பாசிசமும், பாயாசமும்… அதாவது நமது அரசியல் எனிமியும், கொள்கை எனிமியும் என்ன செய்கிறார்கள் என்றால், இருவரும் செட்டிங் செய்துகொண்டு மாறி மாறி சோஷியல் மீடியாவில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் அடிச்சிக்கிற மாதிரி அடிச்சிப்பாங்களாம், அதை நாம் நம்பணுமா… வாட் ப்ரோ இட்ஸ் வெரி ராங் ப்ரோ. ஸ்லீப்பர் செல்ஸ் போல் இவர்கள் எல்லாம் எங்கு இருக்கிறார்கள். இதெல்லாம் ஏமாற்று வேலை மக்களுக்கே தெரியும்.

இதற்கு நடுவில் நமது பசங்க உள்ளே புகுந்து சம்பவம் செய்துவிட்டு வந்துவிடுகிறார்கள். அதாவது TVKforTN என்று ஹேஷ்டேக் போட்டுவிட்டு வந்துவிடுகிறார்கள்.

நாம் எல்லோரையும் மதிப்போம்… ஆனால் சுய மரியாதையை மட்டும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம். நாம் எல்லா மொழிகளையும் மதிப்போம். அதில் மாற்றுக்கருத்து கிடையாது.

தனிப்பட்ட முறையில் யார் எந்த பள்ளியில் வேண்டுமானாலும் படிக்கலாம். எந்த மொழியை எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். அது அவர்களது தனிப்பட்ட உரிமை.

ஆனால் ஒரு கூட்டாட்சி தத்துவத்தை மீறி ஒரு மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக மாநில அரசின் மொழிக் கொள்கையை , கல்விக் கொள்கையை கேள்விக்குறியாக்கி வேறுவொரு மொழியை வலுக்கட்டாயமாக அதுவும் அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி ப்ரோ?

அதனால் பொய் பிரச்சாரங்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு தவெக சார்பாக இதை நாங்கள் உறுதியாக எதிர்ப்போம். வெற்றி நிச்சயம்” என்று தெரிவித்தார். Vijay slams DMK BJP

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share