நடிகர் சங்க தேர்தலை அரசியலாக்கிய நடிகை விஜயசாந்தி

Published On:

| By Balaji

சென்னை மாகாணம் என்று இருந்தபோது தென்னிந்திய நடிகர் சங்கம் என்கிற அமைப்பு சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கியது.

தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னட மொழி படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் சென்னையிலேயே நடைபெற்று வந்தது. மொழி அடிப்படையில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது, தமிழ் சினிமாவை தவிர்த்து மற்ற மொழிகளுக்கான சினிமா சங்கங்கள், படப்பிடிப்புகள் அந்தந்த மாநிலங்களில் செயல்பட தொடங்கியது.

ADVERTISEMENT

ஆனால், தமிழில் மட்டும்தான் இன்னமும் தென்னிந்திய நடிகர் சங்கம் என இருக்கிறது. இந்த சங்கத்தில் போட்டியிட மொழி, இனம் எப்போதும் தடையாக இருந்தது கிடையாது, அரசியல்வாதிகள் ஆதிக்கமும் இருந்தது இல்லை.

அதேபோன்றுதான் பிற மாநிலங்களில் நடிகர் சங்க அமைப்புகள் இயங்கின. ஆனால் பிறமொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் தலைமைப் பொறுப்புக்கு போட்டியிட்டு வெற்றிபெற முடியாத சூழ்நிலை இன்றுவரை தொடர்கதையாக இருந்து வருகிறது.

ADVERTISEMENT

தாங்கள் நடிக்கும் படங்களில் சாதி,மொழி, இன வேறுபாட்டுக்கு எதிராக வசனம் பேசி கைதட்டல் வாங்கும் நடிகர்கள் நடிகர் சங்க தேர்தல்களில் தங்கள் மொழியினரை முன்னிறுத்தும் பழமைவாதம் பலமாகவே இன்றளவும் இருந்து வருகிறது

தெலுங்கு நடிகர் சங்கத்தின் (MAA) பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், புதிய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தொடங்கி, மறைந்த இயக்குநர் பாலசந்தரால் டூயட் படத்தில் நடிகராக அறிமுகமானார். சினிமாவில் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது தமிழ் சினிமா என்றாலும் இவரது நடிப்பு ஆளுமையை அதிகமாக பயன்படுத்திக்கொண்டது தெலுங்கு சினிமாதான்.

சிரஞ்சீவி தொடங்கி இன்றைய இளம் நடிகர்கள் நடித்துள்ள படங்கள் வரை பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார் இவரது தேதி இருந்தால் மட்டுமே முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பை நடத்த இயலும் என்கிற நிலை தெலுங்கு சினிமாவில் இருந்த காலம் உண்டு.

அரசியல், சினிமா, பொதுப் பிரச்சினைகளில் தயக்கம் இன்றி விமர்சனங்களை முன்வைக்ககூடியவர் பிரகாஷ்ராஜ். அவரது சினிமா பிரபலம், சினிமா முதலீடு இவற்றால் வளர்ந்தவர்கள், வளர்க்கப்பட்டவர்கள் தமிழ், தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவர்களே.

ஆனால் தெலுங்கு நடிகர் சங்க தலைவர் தேர்தலில் பிரகாஷ்ராஜ் போட்டியிடுவதாக அறிவித்த நாள் முதல் அவரை நடிகராக பார்க்காமல் கன்னடராக பார்க்கவும், விமர்சிக்கவும் தொடங்கியது தெலுங்கு திரையுலகம்.

இதையடுத்து, தெலுங்கில் அதிகப் படங்களில் நடித்துள்ளதாகவும், தெலுங்குப் படம் மூலம் தான் தேசிய விருது பெற்றதாகவும், தனக்கு ஐதராபாத்தில் வீடு இருக்கிறது, தனது குழந்தை இங்குதான் படிக்கிறார் ஆந்திராவில் இரண்டு கிராமங்களை தத்தெடுத்து பராமரித்து வருவதாகவும், தெலுங்கு நடிகர் சங்க உறுப்பினர் என்ற முறையில் தான் போட்டியிடுவதாகவும் அழுத்தமாக பேசி வருகிறார் பிரகாஷ்ராஜ்.

ஆனாலும்அவரை கர்நாடகாவைச் சேர்ந்தவராகத் தான் பார்க்கிறார்கள். பிரகாஷ் ராஜுக்குப் போட்டியாக மஞ்சு விஷ்ணு, ஹேமா, ஜீவிதா ஆகியோர் தேர்தலில் நிற்கிறார்கள். மேலும், புதிதாக பாஜகவைச் சேர்ந்த நரசிம்மராஜ் என்ற மூத்த நடிகர் ஒருவர் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அவருக்கு தன்னுடைய ஆதரவு இருக்கிறது என பாஜகவைச் சேர்ந்தவரும் நடிகையுமான விஜயசாந்தி அறிவித்துள்ளார்.

பாஜகவிற்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கருத்துக்களைச் சொன்னவர், சொல்லி வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ் என்பதால் அவர் போட்டியிட எழுந்துள்ள எதிர்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது பாஜக என்கிற விமர்சனம் கடந்த சில நாட்களாக தெலுங்கு சினிமாவில் அதிகமாகி இருக்கிறது. ராஜசேகர் மனைவி ஜீவிதா பாஜகவைச் சேர்ந்தவர்தான் என்றாலும் அவரை விஜயசாந்தி ஆதரிக்கவில்லை.

தமிழகத்தில் ரஜினிகாந்த் – கமலஹாசன், விஜய்-அஜீத்குமார் என இரண்டு கோஷ்டிகளாக ரசிகர்கள் பிளவுபட்டு இருப்பார்கள் ஆனால் திரைப்பட துறைசார்ந்த சங்கங்களில் இந்த கோஷ்டி மனப்பான்மை வேற்றுமை உணர்வை ஏற்படுத்தாது.

சிரஞ்சீவி தன்னை ஆதரிப்பதாக பிரகாஷ்ராஜ் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தாலும் அதனை சிரஞ்சீவி பகிரங்கமாக வழிமொழியவில்லை அதேநேரம்

சிரஞ்சீவி குடும்பத்திற்கு எதிராக பாலகிருஷ்ணா குடும்பத்தினர் இருப்பார்கள் என்பது தெலுங்குத் திரையுலகில் அனைவருக்கும் தெரிந்த அரசியல் இது தான் தெலுங்கு நடிகர்கள் சங்க தேர்தலை தீர்மானிக்கும். தற்போது முதன்முறையாக விஜயசாந்தி மூலமாக பாஜக அரசியல் தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்த முயற்சித்துள்ளது.

**-இராமானுஜம்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share