அசத்துகிறதா விஜய் சேதுபதி – யோகிபாபு கூட்டணி? Ace Movie Review 2025
’மகாராஜாவுக்குப் பின் வருகிற விஜய் சேதுபதி படம்’. ஆறுமுககுமார் இயக்கித் தயாரித்துள்ள ‘ஏஸ்’ படத்தின் மீது விஜய் சேதுபதி ரசிகர்கள் ஈர்ப்பு கொள்ள, அந்த ஒரு காரணமே முதன்மையானதாக இருக்கும். அந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்படிப்பட்ட உள்ளடக்கத்துடன் ஒரு படம் இருக்க வேண்டும்? Ace Movie Review 2025
மேற்சொன்னதற்கு நேரெதிராக, ‘மகாராஜான்னு ஒரு படம் வந்ததையே நாங்க மறந்துட்டோங்க’ என்றவாறு ‘ஏஸ்’ ஓடுகிற தியேட்டருக்குச் சிலர் படம் பார்க்க வருவார்கள். அவர்களை இப்படம் திருப்திப்படுத்துகிறதா? Ace Movie Review 2025
இந்த இரண்டு கேள்விகளுக்கும் திரையில் என்ன பதிலைச் சொல்கிறது ‘ஏஸ்’?
யார் இவர்? என்ன செய்கிறார்? Ace Movie Review 2025
மற்றவர்களுக்கு உதவி செய்கிறேன் பேர்வழி என்று சிறை சென்று தண்டனை அனுபவித்து வெளியே வரும் ஒரு மனிதன், தன்னை யார் என்றே தெரியாத ஒரு நாட்டுக்குச் செல்கிறார். அந்த நாடு ’மலேசியா’. Ace Movie Review 2025
’இந்தியாவில் இருந்து தனது உறவினர் அனுப்பி வைத்த நபர் இவரே’ என்று அந்த மனிதரைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறார் ஒருவர். ஒரு ஹோட்டலில் பணியில் சேர்த்துவிடுகிறார். Ace Movie Review 2025
வந்த முதல்நாளே ஒரு இளம்பெண்ணைச் சந்திக்கிறார் அந்த மனிதர். இருவருக்கும் இடையே தொடங்கும் மோதல், குறிப்பிட்ட ஒரு சம்பவத்திற்குப் பின் நட்பாகிறது.

’அந்த சம்பவம் ஒரு சண்டைக்காட்சியாகத்தான் இருக்கும்’ என்று கமர்ஷியல் படங்கள் பார்த்த எவரும் சொல்லிவிடுவார்கள். Ace Movie Review 2025
ஒருகட்டத்திற்குப் பிறகு, அந்த இளம்பெண்ணை அம்மனிதர் விரும்பத் தொடங்குகிறார். அந்த பெண்ணும் அப்படியொரு மனநிலையில்தான் இருக்கிறார்.
அந்த இளம்பெண்ணின் வீட்டில் ஒரு போலீஸ்காரர் இருக்கிறார். அவர், இறந்து போன அப்பெண்ணின் தாயாரது இரண்டாவது கணவர்.
தான் வசிக்கும் வீட்டை அவரிடம் இருந்து பெற, அவருக்கு பத்து லட்சம் வெள்ளி (மலேசிய ரூபாய்) தர வேண்டும் என்கிறார் அந்த இளம்பெண். போலவே, வங்கிக்கடனில் சிக்கித் தவிக்கும் தனது ஹோட்டலை மீட்கப் பத்து லட்சம் வெள்ளி வேண்டும் என்கிறார் அதன் உரிமையாளர்.
இது போகத் தானாக வலியச் சென்று ஒரு வம்பில் மாட்டிக் கொள்கிறார் அந்த மனிதர். ஒரு ரவுடியிடம் பத்து லட்சம் வெள்ளி கடன் வாங்கியதாக, துப்பாக்கி முனையில் கையெழுத்திட வேண்டிய சூழலுக்கு உள்ளாகிறார். Ace Movie Review 2025
மேற்சொன்ன பணத்தை ஒரு சில நாட்களில் கொடுத்தாக வேண்டிய இக்கட்டான நிலையில், ஒரு வங்கிக்குப் பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தை மறிப்பது என்று முடிவெடுக்கிறார் அந்த மனிதர்.
அது நிகழ்ந்ததா, இல்லையா? அதன்பின் அந்த மனிதர் என்னவானார் என்று சொல்கிற மிகச்சாதாரணமான கதையைக் கொண்டிருக்கிறது ‘ஏஸ்’.
படம் முழுவதும், அந்த மனிதரை நோக்கி ‘யார் இவர்’, ‘இங்கு என்ன செய்கிறார்’ என்ற கேள்வியைச் சில பாத்திரங்கள் எழுப்பும். கிளைமேக்ஸ் வரை அது தொடருமாறு பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் ஆறுமுககுமார். அதற்கேற்ப நாயக பாத்திரத்தோடு இதர பாத்திரங்களையும் சுவாரஸ்யமாக வடித்து, அவற்றை ஒன்றிணைக்கிற வகையிலான திரைக்கதையை ஆக்கியிருக்கிறார்.
அது, படம் பார்க்கிற நமக்குச் சுவாரஸ்யமாகத் தெரிகிறது என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம்.
ஈர்க்கிறதா இப்படம்? Ace Movie Review 2025
‘ஏஸ்’ படத்தின் கதையோ, காட்சிகளோ புதிதென்று நிச்சயம் சொல்லிவிட முடியாது. அதனால், ‘இதன் திரைக்கதை ஈர்க்கிறதா’ என்ற கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகப் பதிலளிப்பார்கள்.
அனைத்தையும் கடந்து, ‘எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டருக்கு வருபவரை இப்படம் திருப்திபடுத்துமா’ என்றால், ‘ஆம்’ என்றே சொல்ல வேண்டும். அதற்கேற்ற உள்ளடக்கம் இதில் இருக்கிறது.

அதேநேரத்தில், ‘மகாராஜா படம் பார்த்து ரசித்தவர்களுக்கு இது பிடிக்குமா’ என்றால் ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், அது போன்றதொரு செறிவான கதை சொல்லல், திரையனுபவம் இதில் நிச்சயம் கிடைக்காது.
ஆதலால், ‘மகாராஜா மாதிரி படம் வேணும்னா அதையே இன்னொரு முறை திரும்பப் பாருங்க’ என்று சொல்வதைத் தவிர இப்படக்குழுவிடம் வேறு பதில் இல்லை.
இப்படத்தின் நடுவே நாயகன் வங்கிக்கொள்ளையில் ஈடுபட முயல்வதாக ஒரு காட்சி வருகிறது. அதில் நிறையவே லாஜிக் மீறல்கள் உண்டு. ‘அது எப்படி சரி, இதுக்கு வாய்ப்பே இல்லையே’ எனப் பல கேள்விகளைக் கேட்க முடியும். மீறிக் கேட்டால், தியேட்டரை விட்டு வெளியேறத்தான் வேண்டும்.
ஏனென்றால், அப்படிக் கேள்விகளை எழுப்பாத சிலருக்காகவே ஆக்கப்பட்டிருக்கிறது ‘ஏஸ்’.
இப்படிப்பட்ட உள்ளடக்கத்தைத் திரையில் பார்க்கிறபோது, கொஞ்சமாவது ‘ப்ரெஷ்’ஷான உணர்வு எழ வேண்டும்.
ஒளிப்பதிவாளர் கரண் பி ராவத், கலை இயக்குனர் ஏ.கே.முத்து, படத்தொகுப்பாளர் பென்னி ஆலிவர், பின்னணி இசை தந்திருக்கும் சாம் சி.எஸ். மற்றும் மூன்று பாடல்களுக்கு இசையமைத்திருக்கும் ஜஸ்டின் பிரபாகரன் ஆகியோர் அந்த உணர்வை நமக்குள் நிறையவே உருவாக்கப் பாடுபட்டிருக்கின்றனர்.

‘உருகுது உருகுது’ பாடலில் நம்மை அசத்தியிருக்கிறார் ஜஸ்டின் பிரபாகரன்.
தன் பங்குக்கு ‘ஹே விசிறியே’ பாடலைத் தந்திருப்பதோடு, தொடக்கம் முதல் இறுதி வரை ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்கள் குதூகலிக்கிற வகையிலான பின்னணி இசையைத் தந்திருக்கிறார் சாம் சி.எஸ்.
அதனால், ‘ஏஸ்’ படத்தின் முதுகெலும்பாகத் திகழ்வது பின்னணி இசையே என்று தாராளமாகச் சொல்லலாம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ’ஜாலியான’ விஜய் சேதுபதியைக் காட்டுகிறது ‘ஏஸ்’. அதனை விரும்பிய ரசிகர்களுக்கு இப்படம் நிச்சயம் ஒரு ‘ட்ரீட்’.
நாயகி ருக்மினி வசந்தை ஏற்கனவே ‘ஏழு கடல் தாண்டி’ எனும் கன்னட டப்பிங் படத்தில் பார்த்திருப்போம். ஏ ப்ளஸ் சைஸில், ஐந்தே முக்கால் அடி உயரத்தில் வளர்ந்த குழந்தை போன்று சில இளம்பெண்கள் காட்சியளிப்பார்களே, கிட்டத்தட்ட அப்படியொரு தோற்றத்தில் இதில் வந்து போயிருக்கிறார் ருக்ஸ். நிச்சயம் அது ரசிகர்களுக்குப் பிடிக்கும்.
யோகிபாபு – விஜய் சேதுபதி சேர்ந்தே வருகிற மாதிரி தொடக்கம் முதல் இறுதி வரை பல காட்சிகள் உண்டு. அதனால், ஒரு ‘செகண்ட் ஹீரோ’ போலவே இதில் தோன்றியிருக்கிறார் யோகிபாபு.

இந்த கூட்டணி நன்றாகவே இப்படத்தில் சிரிக்க வைக்கிறது. சில ஜோக்குகள் ‘பழசு’ என்றாலும், காட்சி சூழல் நம்மைச் சிரிக்கத் தூண்டிவிடுகிறது. அதுவே இப்படத்தின் பலம்.
’தி வில்லேஜ்’ சீரிஸில் நடித்த திவ்யா பிள்ளை, ‘ராஜ்குமார், மலேசிய கலைஞர்கள் முத்துகுமார், டெனிஸ் குமார், ஆல்வின் மார்ட்டின், பிரிசில்லா நாயர் உள்ளிட்டவர்களோடு வில்லன்களாகத் தலைகாட்டியிருக்கின்றனர் பப்லு பிருத்விராஜ் மற்றும் கேஜிஎஃப் அவினாஷ்.
’கமர்ஷியல் படம்னா இப்படித்தான் இருக்கும்’ என்று சில வரையறைகளை சினிமா ரசிகர்களே வகுத்து வைத்திருப்பார்கள். ‘இதெல்லாம் இருந்தா அது பார்க்கக் கூடிய படம் தான்’ என்று சிலர் கோடு கிழித்திருப்பர்கள். அவற்றுக்குள் சரிவரப் பொருந்தக்கூடியது ‘ஏஸ்’. மற்றபடி புதுமை விரும்பிகள் இந்த படத்திற்குச் சென்றால் நிச்சயம் ‘அலர்ஜி’க்கு உள்ளாவார்கள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில், ஆறுமுக குமார் இயக்கத்தில், ஜாலியாக பார்க்கும்படியான ஒரு கமர்ஷியல் படமாக வந்திருக்கிறது. ‘இதுல பாட்டு இருக்கு, பைட் இருக்கு, காமெடி இருக்கு, ரொமான்ஸ் இருக்கு, கிண்டல் பண்ணி ரசிக்க நிறைய க்ளிஷேவும் இருக்கு. வேறென்ன வேணும்’ என்கிறது இந்த ‘ஏஸ்’.
என்ன, இது போதுமா?!