விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் திட்டமிட்ட சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டிருக்கிறார் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். அவர் 3,77,721 வாக்குகள் பெற்ற நிலையில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரிடம் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் இன்று (ஜூன் 6) செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா, விஜய பிரபாகரன் தோற்றது தொடர்பாக பகிரங்க குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
அவர், “விருதுநகரில் விஜய பிரபாகரன் தோல்வியடைந்தார் என அறிவிக்கப்பட்டது. உண்மையில் விருதுநகரில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார். வீழ்ச்சியடையவில்லை, வீழ்த்தப்பட்டிருக்கிறார்.
விஜய பிராபகரன் 0.4 சதவீத வாக்கு வித்தியாசத்தில், மிக மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் விஜய பிரபாகரன் தோல்வியடைந்தார். திட்டமிட்ட சூழ்ச்சியால் தான் விஜய பிரபாகரன் வீழ்த்தப்பட்டிருக்கிறார்.
ஒவ்வொரு சுற்றிலும் ஊடகங்களில் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும், வாக்கு எண்ணும் மையத்தில் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும் இடையே பெரும் வித்தியாசம் இருக்கிறது.
வாக்கு எண்ணிக்கையை அறிவிப்பதிலேயே பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மதியம் 3 மணி முதல் 5 மணி வரை வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி விட்டார். இதுகுறித்து வெளியே வந்து பேசிய ஆட்சியர், ‘இங்குள்ள நிலைமையை என்னால் சமாளிக்க முடியவில்லை. பல்வேறு இடங்களில் இருந்து எனக்கு அழுத்தம் வருகிறது’ என்று கூறினார். அவருக்கு அழுத்தம் கொடுத்தது யார் என்பது தெரியவேண்டும்.
விருதுநகரில் இரவு 1 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதன்பிறகு தான் திமுக அமைச்சர்களோடு சென்று மாணிக்கம் தாகூர் வெற்றி சான்றிதழை வாங்குகிறார். ஆனால் அதற்கு முன்னதாகவே முதல்வர் 40க்கு 40 தொகுதிகளை திமுக வென்றது என எப்படி சொல்கிறார்?
வாக்கு எண்ணும் மையத்திலேயே தேமுதிக மற்றும் அதிமுக நிர்வாகிகள் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோரினர். ஆனால் அதற்கு அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை. அதற்கு பதிலாக மிரட்டும் தொனியில் அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டனர்.
எல்லா தொகுதியிலும் காலையிலேயே தபால் வாக்கு எண்ணுவார்கள். ஆனால் விருதுநகரில் மட்டும் தபால் வாக்குகளை முதலில் எண்ணவில்லை. கடைசியில் நள்ளிரவு வரை அவற்றை எண்ணினார்கள். இப்படி பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது.
மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்தில் இ-மெயில் வழியாக நேற்று புகார் மனு அளித்துள்ளோம்.
ஒரு சின்ன பையனை, பெரிய மனசு பண்ணி ஜெயிக்க வச்சிருந்தாங்கன்னா, இந்த ஆட்சியை தலைவணங்கி வரவேற்றிருப்பேன்.
தேர்தல் தோல்விக்கு யாரையும் குறை சொல்லவில்லை. மேலும் இவ்விவகாரத்தில் நீதிமன்றம் சென்றால் உடனடியாக தீர்ப்பு கிடைக்குமா? என்பது தெரியவில்லை. அதனால் தான் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம்.
விருதுநகரில் மீண்டும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மற்றொரு முறை வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “அதிமுக – தேமுதிக இணைந்து செயல்பட்டுள்ளோம். இனிவரும் காலங்களிலும் தேமுதிக – அதிமுக கூட்டணி தொடரும். அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் வெற்றி உறுதி. அதிமுகவில் இருப்பது உட்கட்சி பிரச்னை. அதிமுகவில் அனைவரும் ஒன்று சேர்ந்தால் அது வரவேற்கத்தக்கது” என்று பிரேமலதா கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”அதிமுக தொண்டர்களை அழைக்க ஓபிஎஸ்-க்கு உரிமை இல்லை”: கே.பி.முனுசாமி