தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய விஜய், சட்டமன்ற தேர்தலில் தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என்று தெரிவித்தார். Vijay planned zonal conclave
விஜய்யின் இந்த பேச்சுக்கு ஆளும் திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்வினையாற்றி வருகின்றன.
இந்தநிலையில், வரும் நாட்களில் தவெக தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க இருப்பதாகவும், மண்டல மாநாடு நடத்த இருப்பதாகவும் தவெக கொள்கைப் பரப்பு இணைச்செயலாளர் சம்பத்குமார் இன்று (மார்ச் 30) தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி என்ற அரசியல் நிலைப்பாட்டோடு, ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளையும் தோழமை சக்திகளாகப் பார்க்கும் எங்கள் தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு தனிப்பெரும்பான்மையுடன் வென்று ஆட்சியைப் பிடிக்கும் ஆற்றல்மிக்க கட்சியாக தவெகவை கட்டமைத்து வருகிறார்.
அதேவேளையில், எங்கள் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டு தவெக தலைமையில் கூட்டணியில் இணைய ஜனநாயக சக்திகள் ஆர்வம் கொண்டிருந்தால், அதை விஜய் கனிவுடன் பரிசீலனை செய்து இணைத்துக் கொள்ளவும் தயாராக இருக்கிறார்.
மேலும், அப்படி அமையும் ஆட்சியில் அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கவும் முடிவெடுத்திருக்கிறார். முதல் மாநாடு, முதல் செயற்குழு, முதலாவது ஆண்டு விழா இப்போது முதல் பொதுக்குழு என அனைத்தும் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இன்னும் அடுத்தடுத்து எங்கள் தலைவரின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், மண்டல மாநாடு மற்றும் மக்கள் பிரச்சனைகளுக்கான தீவிர களப்போராட்டங்கள் என்று எங்கள் அஜெண்டா மிகவும் பெரியவை மற்றும் சிறந்தவை மக்களே.
விஜய் தலைமையில் புதியதோர் ஆட்சி அமையும். அது ஊழல்வாத, மதவாத சக்திகளுக்கு மாற்றாகத் திகழும். பொற்கால ஆட்சி என்றால் என்னவென்று இப்போதுள்ள தலைமுறை உணரும் வண்ணம் ஆட்சி நடத்த எங்கள் தலைவர் தயாராக இருக்கிறார். அதன்பின் அரசியலில் இருந்து பலருக்கு ஓய்வு கொடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார். Vijay planned zonal conclave