விஜய்யின் ‘மக்கள் சந்திப்பு’ : ஆம்புலன்ஸுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது – தவெக அறிவுரை!

Published On:

| By Kavi

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்முறையாக நாளை (செப்டம்பர் 13) பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

இந்தநிலையில் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இருந்து பிரச்சார வாகனம், “உங்கள் விஜய் நான் வரேன்” என்ற வாசகத்துடன் பனையூரில் இருந்து இன்று மதியம் புறப்பட்டுச் சென்றுள்ளது.

ADVERTISEMENT

நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் விஜய் அங்கிருந்து கார் மூலம் பிரச்சாரம் நடைபெறும் இடத்துக்கு சென்று, பிரச்சார வாகனத்தில் இருந்து மக்களை சந்தித்து பேசவுள்ளார்.

விஜய்யின் பிரச்சாரத்துக்கு பல்வேறு கெடுபிடிகளை திருச்சி காவல்துறை விதித்துள்ளது.

ADVERTISEMENT

விஜய் 30 நிமிடம் மட்டுமே பேச வேண்டும், பிரச்சார வாகனத்துடன் 5 வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும், ரோடு ஷோ நடத்த அனுமதியில்லை என 23 நிபந்தனைகளை விதித்துள்ளது.

இந்தநிலையில் எந்த கட்சியும் எதிர்கொள்ளாத நிபந்தனைகளை தவெக எதிர்கொள்கிறது என்று விஜய் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இந்தசூழலில் கட்சி தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் தவெக சில அறிவுரைகளை நிபந்தனைகளையும் வழங்கியுள்ளது.

விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை யாரும் இருசக்கர வாகனங்களில் அல்லது வேறு வாகனங்களில் பின்தொடர வேண்டாம்.

கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், நிகழ்ச்சிகளில் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போதோ, விஜய் வந்து செல்லும்போதோ பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்

வாகனங்களை நிறுத்தும் பொழுது, பிறருக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் நிறுத்த வேண்டும்.

சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும்

நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், நெடுஞ்சாலை/இதர சாலைகளின் இருபுறங்களிலும் பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ அனுமதியின்றி வைக்கக் கூடாது.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின் விளக்குக் கம்பங்கள் (EB Lamp Posts), மின் கம்பங்கள் (EB Posts), மின்மாற்றிகள் (EB Transformers), வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள், சிலைகள் ஏதேனும் இருந்தால் அதனைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மற்றும் தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், மாணாக்கர்களுக்கும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் கலந்துகொள்ள வேண்டும்.

காவல்துறையின் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுத்த வேண்டும்” என்று கட்சித் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share