தவெக மாநாடு – இன்னும் 13 நாட்கள்… என்ன செய்ய போகிறார் விஜய்?

Published On:

| By Kavi

தவெக வெற்றிக் கழக மாநாட்டுக்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில்,  விஜய் என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் போலீஸ் அனுமதி கிடைக்காததால் அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடத்தப்படும் என்று கட்சித் தலைமை அறிவித்தது.

விக்கிரவாண்டியில் மாநாட்டு பணிகள் நடந்து வரும் நிலையில், அதுதொடர்பான நேரடி ரிப்போர்ட்டை”ரிலாக்ஸ் விஜய் பதட்டத்தில் போலீஸ்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் மாநாடு நடக்கும் பகுதியில் கார்பார்க்கிங் இடங்களை தயார் செய்வதற்கான பணிகள் இன்று (அக்டோபர் 14) முதல் வேகப்படுத்தப்படும் என்று போலீசாரிடம் தவெகவினர் கூறியிருக்கின்றனர்.

ஆனால் அதற்கு மாறாக இன்று முதல் மாநாடு பணிகள் மிகவும் சுணக்கமாக நடந்து வருவதை காண முடிந்தது.

தற்போது பத்திரிகையாளர்கள், போட்டோகிராபர்கள் மாநாடு நடைபெறும் இடத்துக்குள் செல்ல தவெகவினர் தடை போட்டுள்ளனர். மீறி உள்ளே செல்பவர்களை தவெகவினர் பவுன்சர்களை வைத்து வெளியே அனுப்புகிறார்கள். வீடியோ, போட்டோ எடுக்கக்கூடாது என்று கெடுபிடி செய்து வருகின்றனர்.

மாநாடு நடக்கும் இடத்தை சரிசெய்யாமல் இருந்தால் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த சிரமங்கள் ஏற்படும். பார்க்கிங்கை சரிசெய்யாமல்  வாகனங்களை சாலையில் இருந்து கீழே இறக்கமுடியாது. அந்த நிலையில் தான் தற்போது வரை தவெக மாநாடு நடைபெறும் இடம் உள்ளது.

இந்நிலையில் தவெக மாநாடு பந்தல் வேலைகளை பற்றி, பெரிய பெரிய அரசியல் கட்சிகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் பந்தல் பணி செய்து வரும் பிரபல நிறுவன ஊழியரிடம் பேசினோம்.

“தவெக மாநாட்டுக்கு சுமார் 2 லட்சம் பேர் கூடுவார்கள் என்று பரவலான தகவல்கள் வருகிறது. இவ்வளவு பேர் கூட வேண்டும் என்றால் 25 ஏக்கர் நிலங்கள் தேவைப்படும். இந்த இடத்தில் 12 லட்சம் சதுரடி நிலத்தை சமமாக சரி செய்து, டீப் லெவல் பார்த்து பள்ளமான பகுதிகளில் வெளியில் இருந்து கிராவல் மண் பல லோடுகள் எடுத்துவந்து கொட்டி சரி செய்ய வேண்டும்.

கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க பாக்ஸ், பாக்ஸாக தடுப்புகள் கட்ட வேண்டும். வழிபாதைகள் ஏற்படுத்த வேண்டும். மின் விளக்குகள், ஸ்பீக்கர்கள் போட வேண்டும். இதை செய்யவே 18 நாட்கள் தேவைப்படும்.

அதற்கும் மேல் 2 லட்சம் பேருக்கு பந்தல் போட வேண்டும் என்றால் கூடுதலாக் 15 நாட்கள் தேவைப்படும். இதற்காக 250 பணியாளர்கள் இரவும் பகலுமாக தினசரி வேலை செய்தால் தான் மாநாட்டு பணிகளை முழுமையாக முடிக்க முடியும்.

அதேபோல் தான் உணவு வழங்குவதற்கு 10 ஆயிரம் பேருக்கு ஒரு ஃபுட் என 2 லட்சம் பேருக்கு 20 ஃபுட் கோர்ட் அமைக்க வேண்டும்.

கார் பார்க்கிங் இடத்தில் தண்ணீர் நிற்காத அளவுக்கு கிராவல் மண்ணை கொட்டி உயரப்படுத்த வேண்டும்.

10 பிளாட்பார்ம் அமைத்து மண்டல வாரியாக வரும் வாகனங்களை பிரித்து அனுப்பும் வகையில் பார்க்கிங் வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

பார்க்கிங்கில் 10 ஆயிரம் கார்கள் நிறுத்த வேண்டும் என்றால், அதற்காக தடுப்பு அமைத்து 15 அடியில் ரோடு போட வேண்டும்.  ஒவ்வொரு பார்க்கிங் பகுதியிலும் ரெக்கவரி லாரி நிறுத்தி வைக்க வேண்டும். இதுபோல பார்க்கிங் இடத்தை சமம் செய்து சாலை, தடுப்பு, மின்விளக்கு ஆகியவற்றை அமைக்க 20 நாட்கள் குறையாமல் தேவைப்படும்.

இன்னும் 13 நாட்களே இருக்கும் நிலையில் பார்க்கிங்கிற்கான வேலையே இன்றுவரையில் தொடங்கவில்லை. இருக்கக்கூடிய குறைவான நாட்களில் என்ன செய்யமுடியும்” என்கிறார்.

இதுதொடர்பாக நாம் தாவெக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது,  “இந்த மாநாட்டை பொறுத்தவரை ஒன் மேன் ஆர்மியாக உள்ளது. ஒரு கூட்டு முயற்சி இல்லை. அனுபவமுள்ளவர்கள் ஆலோசனை சொல்ல முன்வந்தாலும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அதற்கு முட்டுக்கட்டை போட்டு விஜய்யிடம் நெருங்காமல் பார்த்துக்கொள்கிறார். மாநாடு பணிக்கு பணம் எடுக்கவும் தயங்குகிறார்கள்” என கூறுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி

கனமழை : பொதுக்கூட்டத்தை ரத்து செய்த ராமதாஸ்

காற்றழுத்த தாழ்வு பகுதி… எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share