தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று (மார்ச் 7) நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். vijay participate iftar at ymca hall
சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் தவெக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சிக்காக 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி, உலர் பழங்கள் ஆகியவை தயார் செய்யப்பட்டு தயாராக இருந்தது.

இதனையடுத்து சரியாக 5.20 மணிக்கு, இஸ்லாமியர்களை போல தலையில் வெள்ளை தொப்பி, வெள்ளை சட்டை, வெள்ளை கைலி அணிந்த படி விஜய் அங்கு வந்தார்.

அப்போது அங்கிருந்த ரசிகர்களையும் கட்சியினரையும் பார்த்து உற்சாகமாக கையசைத்தபடி வந்த அவர், இஸ்லாமியர்களுடன் சேர்ந்து நோன்பு கஞ்சி அருந்தி நோன்பு திறந்தார். பொதுவாக அரசியல் தலைவர்கள் இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது அவர்களுக்கு என தனியாக மேடையில் இருக்கையில் அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் விஜய் அங்கிருந்த இஸ்லாமியர்கள் அனைவரோடும் சேர்ந்து தரையில் அமர்ந்து நோன்பு கஞ்சியை அருந்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் தலைமை காஜி சலாவூதின் முகமது அயூப் மற்றும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 15க்கும் மேற்பட்ட ஜமாத் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

அவர்களுடன் 6.40 மணியளவில் நடந்த சிறப்பு (மக்ஃரிப்) தொழுகையில் விஜய் பங்கேற்றார். முன்னதாக தொழுகை இடத்தில் விஜய்யின் கைகளால் குரான் வைக்கப்பட்டது.

தொழுகைக்கு பின்னர் விஜய் பேசுகையில், “என் நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள் உங்கள் அனைவருக்கும் என் வணக்கம். மாமனிதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையின்படி, மனித நேயத்தையும், சகோதரத்துவத்தையும் பின்பற்றி, என் அழைப்பினை ஏற்று இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவருக்கும் என் மனமாந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று விஜய் தெரிவித்தார்.
பின்னர் அங்கிருந்த திறந்த வேனில் நின்றபடி அங்கிருந்த அனைவரையும் பார்த்து கையசைத்தபடி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இருந்து வெளியேறினார் விஜய்.

நிகழ்ச்சி சிறப்பாக முடிந்த நிலையில், தவெகவின் இப்தார் நோன்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டவர்களையும் தாண்டி அதிகளவில் வந்ததால் அப்பகுதியில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.