வைஃபை ஆன் செய்ததும், ‘நாற்காலிக்கு சண்டை போடும்’ பாடலை பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
ஆரம்பிக்கும்போதே அதகளமா?
விஜய் தவெகவில்தான்.. சந்தோஷத்துக்கும் குறைச்சல் இல்லை.. பஞ்சாயத்துக்கும் பஞ்சமில்லை என்கிற கதை.
ஓஹோ சந்தோஷத்தில் இருந்து ஆரம்பிக்கலாமே?

மதுரை மாநாடு வெற்றிகரமாக முடிந்துவிட்ட மகிழ்ச்சியில் சென்னை திரும்பினார் விஜய். அதே ஜோரில், புஸ்ஸி ஆனந்தை அழைத்து எந்த எந்த மாவட்டத்தில் இருந்து அதிகமான பேர் வந்திருந்தாங்க என்ற விவரத்தையும் கேட்டு வாங்கி அந்த மாவட்ட நிர்வாகிகளை பாராட்டி இருக்கிறார். விஜய்யின் இந்த பாராட்டுகளை மறக்காம அந்தந்த மாவட்டங்களுக்கு போன் போட்டு சொல்லி இருக்கிறார் புஸ்ஸி ஆனந்த். இதனால் தவெக மாவட்டங்களில் ஒரே சந்தோஷம்.
தவெகவில் திருச்சி மாவட்டம்தான் ஏக குஷியில் இருக்கிறது. இந்த மகிழ்ச்சிக்கான காரணம் பற்றி திருச்சி தவெகவினரிடம் விசாரித்த போது, “நம்ம திருச்சியில் இருந்துதான் தலைவர் செப்டம்பர் மாதம் பிரசாரத்தைத் தொடங்க போறார்.. எங்களுக்கு மேல இருந்து தகவல் வந்திருச்சு.. நாங்களும் ‘சம்பவம்’ ‘சம்பவமாக’ வரவேற்பு கொடுக்க ரெடியாகிட்டு இருக்கோம்.. தலைவர் டூர் போறதுக்காகவே பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஸ்பெஷல் பஸ்ஸை இறக்கிட்டாங்க.. பனையூரில் அந்த பஸ்ஸூக்கு பூஜையெல்லாம் போட்டு ரெடியாகிடுச்சு..
தளபதி டூர் போகும் இந்த பஸ்ஸுக்குள்ளேயே லிப்ட் வசதியும் வெச்சிருக்காங்க.. தொண்டர்களை பார்க்க லிப்ட்டில் ஏறி வெளியே வருவது மாதிரி செட்டப் செஞ்சிருக்காங்க..” என பூரித்தபடியே சிலாகித்தனர்.
சரி.. அதென்னப்பா ‘பனையூர் பஞ்சாயத்து’?

தவெகவில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ் மூவருமே ஜான் ஆரோக்கியசாமி மீது செம்ம வருத்தத்தில் இருப்பதை நாம் முன்னரே விலாவாரியாக எழுதி இருந்தோம்.. விஜய்யும் மதுரை மாநாடு முடிந்த உடன் பேசலாம் என சொல்லி இருந்தார் அல்லவா? அந்த பஞ்சாயத்துதான் ஆகஸ்ட் 27-ந் தேதி புதன்கிழமை பனையூரில் நடக்கப் போகிறது.
ஆதவ் அர்ஜூனாவைப் பொறுத்தவரை, “மாநாட்டுக்காக பல கோடி செலவு செஞ்சும் மாநாட்டில் பேசுறதுக்கு கூட ஜான் ஆரோக்கியசாமி முட்டுக் கட்டை போட்டாரு.. சண்டை போட்டுதான் பேச வாய்ப்பே வாங்க முடிஞ்சது.. இதை எல்லாம் எப்படி ஏற்க முடியும்… ஏன்டா இந்த கட்சிக்கு வந்தோம்னு நினைக்கிற அளவுக்கு விரக்தி அடைய வைக்கிறாரு ஜான் ஆரோக்கியசாமி.. அதனால இதுக்கு ஒரு முடிவு தெரியனும்” என்கிறாராம்.
தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜின் ஆதரவாளர்கள், “அண்ணன் எவ்வ ளவுபெரிய பதவியை விட்டு வந்திருக்கிறார்.. தவெகவின் கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன்தான்.. ஆனால் அண்ணனுக்கு தெரியாமலேயே அவர் சம்பந்தப்பட்ட கூட்டங்களை ஜான் ஆரோக்கியசாமி நடத்துறார்.. இப்படித்தான் ஒவ்வொரு நிகழ்விலும் அண்ணனை ஜான் ஆரோக்கியசாமி ரொம்பவே அவமரியாதை செய்யறார். எங்ககிட்ட பேசும் போது கூட, “இத்தனைக்கும் ஜான் ஆரோக்கியசாமியை தளபதிகிட்ட அறிமுகம் செஞ்சு வெச்சதே நான்தான்..என்னால் விஜய்க்கு ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி இப்ப என்னையே காலி செய்ய பார்க்கிறார் ” என அண்ணன் அருண்ராஜ் நொந்து போகிறார் என வேதனையை கொட்டுகின்றனர்.
புஸ்ஸி ஆனந்தும் கூட, “என்னமோ நான் தனியா கூட்டம் சேர்க்கிறேன்னு தலைவர் கிட்ட ஜான் போட்டு கொடுத்துட்டாரு.. கட்சி பசங்க ஆர்வத்துல ஏதோ செய்றாங்கன்னு நாம அமைதியாக இருந்தா அதையே சாக்காக வெச்சு சிண்டு முடிச்சு விடுறார் ஜான்.. இவரு பேச்சை கேட்டு என் மேல கூட தலைவர் கோபப்பட்டுவிட்டார்” என சக நிர்வாகிகளிடம் சலிப்பை காட்டுகிறாராம்.

தம்மை சுற்றிய தவெகவின் ‘தூண்களுக்குள்’ இடையே நடக்கும் இந்த அக்கப்போருக்கு தீர்வு காணத்தான் பனையூரில் புதன்கிழமையன்று பஞ்சாயத்தை கூட்டி இருக்கிறார் விஜய்.
இப்படி பஞ்சாயத்து கூடும் நேரத்துல விஜய் அப்பா டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளே நுழைந்து, அவர் பங்குக்கு ஒரு வேலையை செய்து வைத்திருக்கிறாராம்.
அது என்ன?
ஜான் ஆரோக்கியசாமி மீதான அதிருப்தி, மதுரை மாநாட்டுக்கு முன்னதாக கேரவன் வேன் அருகே நடந்த சண்டை எல்லாவற்றையும் விலா வாரியாக தெரிந்து கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகரன், விஜய்க்கு ஒரு தகவல் அனுப்பி இருக்கிறார்.
அதில், “கட்சியோட 2-வது மாநாடு நடக்கும் போதே இத்தனை பிரச்சனைகள் வெடிக்குது.. சண்டை ஓவராக நடக்குது.. ரொம்ப கவனமா இருக்கனும்பா..
மாநாட்டுக்கு ஆதவ் அர்ஜூனா மட்டுமே ரூ25 கோடி செலவு செஞ்சதா சொல்றாங்க.. ஆனால் எனக்கு கிடைச்ச தகவல், வெளியே நிறைய வசூல் செஞ்சிருக்காங்க.. டிவி ஓனர் ஒருவர்கிட்ட பெருந்தொகையை வாங்கி இருக்காங்க.. அதனால மாநாட்டு வரவு செலவு கணக்குகளை எல்லாம் ரொம்ப கவனமாக பார்க்கனும்.. இப்பவே தப்பா இருக்கிறதை எல்லாம் சரி செய்யனும்” என சொல்லி இருக்கிறாராம் எஸ்.ஏ.சி.
ஆதவ் அர்ஜூனா ஏற்பாடு செய்த பவுன்சர்கள் பற்றியும் எஸ்.ஏ.சி கேள்விகளை எழுப்பி இருக்கிறாராம்..
“விஜய்க்கு பவுன்சர்களாக வந்தவர்கள் துபாய் நிறுவனத்தை சேர்ந்தவர்கள். இந்த நிறுவனத்துக்கு மட்டும் ரூ 2.5 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.. பவுன்சர்களுக்கு மட்டுமே ரூ2.5 கோடி செலவாகுமா?” என்பதுதான் விஜய்க்கு எஸ்.ஏ.சி அனுப்பிய தகவலில் இருக்கிறது.

இந்த பவுன்சர்கள்தான் விஜய்க்கு இப்போது பெரும் குடைச்சலாகி இருக்கின்றனர். சென்னையில் இருந்து மதுரைக்கு விஜய் சென்றது முதல் திரும்ப வந்தது வரை இந்த பவுன்சர்கள்தான் முழுமையாக உடன் இருந்தனர். விஜய் மாநாட்டில் ரேம்ப் வாக் வரும் போது, தொண்டர் ஒருவரை பவுன்சர்கள் ஈவு இரக்கமே இல்லாமல் தூக்கி அடித்திருந்த சர்ச்சை மெல்ல மெல்ல பெரிதாகும் நிலையில் எஸ்.ஏ.சி அவர் பங்குக்கு சில சந்தேகங்களை கிளப்பி விட்டுள்ளார்.

இத்தனையும் தான் புதன்கிழமை (ஆகஸ்ட் 27) விஜய் நடத்தும் ‘பனையூர் பஞ்சாயத்தில்’ விலாவாரியாக பேசப்பட இருக்கிறதாம்.. இந்த பஞ்சாயத்துக்கு பின்னர் விஜய்யின் தவெகவில் பிரளயம் வெடித்தாலும் ஆச்சரியமில்லை போல என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.
