ரிலாக்ஸ் விஜய் பதட்டத்தில் போலீஸ்… நேரடி ரிப்போர்ட்!

Published On:

| By Selvam

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பைபாஸ் சாலையில் நடைபெறவுள்ளது.

மாநாட்டு திடலுக்கு 85 ஏக்கர் நிலமும், வாகனங்களை நிறுத்த 90 ஏக்கர் நிலமும் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

அக்டோபர் 4-ஆம் தேதி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கால்கோள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் 3,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மாநாட்டு பணிகளை ஒருங்கிணைப்பதற்காக, பொருளாதார குழு, சட்டநிபுணர் குழு, வரவேற்பு குழு, மகளிர் பாதுகாப்பு குழு, வானிலை தகவல் பகிர்வு குழு உள்பட 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

விஜய் மாநாட்டில் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நான்கரை லட்சம் பேர் கலந்துகொள்ள இருப்பதாக விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் ஆர்வத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

தினமும் மாநாட்டு பணிகளை மேற்பார்வையிடுவதற்காக ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற 100 கார்களில் வரும் 500-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு வருகிறார்கள்.

மாநாடு நடைபெறும் இடத்திற்கு நேரடியாக நாம் சென்று மாநாட்டு பணிகளையும் அங்குள்ள சூழலையும் பார்த்தோம்…

மாநாடு நடைபெறும் இடத்திற்கு மத்தியில் பெரிய கிணறு ஒன்று இருக்கிறது. தலைவர்கள் அமரும் மேடைக்கு பின்னால் ரயில்வே டிராக் இருக்கிறது.

மாநாடு நடைபெறும் இடத்திற்கு மேலே சுமார் 700 மீட்டர் தூரத்திற்கு மின் கம்பிகள் செல்கிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் வாகனங்களை நிறுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கார் பார்க்கிங்கில் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

தண்ணீருக்கு அடியில் காலை வைத்தால் ஒரு அடி ஆழம் உள்ளே செல்கிறது. கார்பார்க்கிங்கில் இன்னும் மண்ணை சமப்படுத்தும் வேலை ஆரம்பிக்கவில்லை.

மாநாட்டை கவனித்துவரும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் பேசினோம்.

மாநாடு நடக்கும் இடத்திற்கு மேலே மின்கம்பி செல்வதால், பிரச்சனைகள் ஏதாவது ஏற்படுமா என்று கேட்டோம்.

அதற்கு, “மின்வாரிய அதிகாரியிடம் 600 மீ தூரத்திற்கு மின்கம்பிகளை அகற்றி கொடுக்க கடிதம் கொடுத்துள்ளோம்” என்றனர்.

மாநாட்டு நடுவில் பெரிய கிணறு இருக்கிறதே என்று கேட்டபோது,  “கிணற்றின் மீது தகடு வைத்து மூடும் பணிகள் நடந்து வருகிறது” என்கிறார்கள்.

மழைக்காலத்தில் பொதுமக்கள் அமரும் இடத்தில் பந்தல் அமைக்காதது ஏன் என்று கேட்டபோது, “மழை வருவது போன்று இருந்தால் மக்கள் அமரும் இடத்தில் பந்தல் அமைப்போம்” என்கிறார்கள்.

மாநாட்டு பணிகளை தொடர்ந்து பார்வையிட்டு வரும் காவல்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம், “2013-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் எடைக்கல் இளஞ்சியில் விஜயகாந்த் நடத்திய மாநாட்டில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியிலும் தேசிய நெடுஞ்சாலையிலும் சுமார் 8 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது

விஜய் மாநாட்டிற்கு இரண்டு லட்சம் பேர் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். கார்பார்க்கிங் பகுதியில் தண்ணீர் தேங்குவதால், பலரும் பைபாஸ் சாலையோரம் காரை நிறுத்துவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. மக்கள் அதிகளவில் கூடுவதால் தேசிய நெடுஞ்சாலையில் 12 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிக்க வாய்ப்புள்ளது.

மாநாட்டுக்கு வருபவர்களுக்கு உணவு பொருள் எப்படி வழங்க போகிறீர்கள்? கூட்டத்தை எப்படி சமாளிக்க போகிறீர்கள்? குடிநீருக்கு என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்? என்று கேட்டால் மாநாட்டை கவனிக்கூடியவர்கள் சரியாக புரிந்துகொள்ளாமல் பார்த்துக்கொள்கிறோம் என்கிறார்கள்.

மாநாட்டை ஒருங்கிணைக்க 27 குழுக்களை விஜய் அமைத்துள்ளார். இந்த குழுக்கள் இடையே சரியான கம்யூனிகேஷன் இல்லை. இதை யார் மானிட்டரிங் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இதனால் நாங்கள் டென்ஷனாக இருக்கிறோம்” என்கிறார்கள்.

விழுப்புரம் ஏஎஸ்பி ரமேஷ் குமார் குப்தா, விக்கிரவாண்டி டிஎஸ்பி நந்தகுமார், இன்ஸ்பெக்டர் பாண்டியன், டிராபிக் போலீஸ் ஆர்ஐ உள்ளிட்ட போலீசார் மாநாடு நடைபெறும் இடத்தில் நேற்று (அக்டோபர் 12) ஆய்வு செய்தனர்.

அப்போது தவெக பொறுப்பாளர்கள் வடிவேலு மற்றும் வழக்கறிஞர் அரவிந்தனிடம் கார்பார்க்கிங் பகுதியில் தேங்கியுள்ள நீரை மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்ற வேண்டும், அதற்கான வடிகால் அமைக்க வேண்டும், தடுப்புகள் மற்றும் மின்விளக்குகள் பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கினார்.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சாம்சங் பிரச்சினை: “போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்” – சிஐடியு-க்கு தொமுச வேண்டுகோள்!

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? – வானிலை மையம் அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share