நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் ரூ.1 கோடி நிதி அளித்துள்ளார்.
இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளைத் தொடர ஏதுவாக நடிகர் விஜய் நடிகர் சங்கத்துக்கு வளர்ச்சி நிதியாக அவரது சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தி.நகர் ஹபிபுல்லா சாலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் புதிய கட்டிடத்திற்கு கடந்த 2017ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கு அடுத்தவருடமே திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 6 ஆண்டுகள் ஆகியும் நிதி பற்றாக்குறை காரணமாக கட்டிடப் பணிகள் நிறைவு பெறாமல் நிலுவையில் உள்ளது.
இதனையடுத்து பணி முழுமை பெற 40 கோடிக்கு மேல் தேவைப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதற்காக கடன் பெறும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முன்னணி நடிகர், நடிகைகளும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த மாதம் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி புதிய நடிகர் சங்க கட்டிடத்தின் மேம்பாட்டுக்காக ரூ.1 கோடி நிதி வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து கடந்த 9ஆம் தேதி நடிகர் கமல்ஹாசனும் தனது பங்களிப்பாக ரூ. 1 கோடிக்கான காசோலையை நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோரிடம் வழங்கினார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் கட்டிடப் பணிகளுக்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தேர்தலுக்கு முன்பாக ராஜினாமா செய்த தேர்தல் ஆணையர்… காரணம் பாஜகவா? என்ன நடக்கிறது?
டிஜிட்டல் திண்ணை: பொன்முடி மீண்டும் அமைச்சர் ஆவாரா? முதல்வர் ஸ்டாலின் முடிவு என்ன?