அடுத்தாண்டு பொங்கலையொட்டி ஜனவரி 9ஆம் தேதி விஜய்யின் ஜனநாயகன் படத்துடன், பிரபாஸின் தி ராஜாசாப் திரைப்படமும் வெளியாக உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்தி வரும் விஜய்யின் கடைசி படமாக வெளியாக உள்ளது ஜனநாயகன்.
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு ஆகிய படங்களுக்கு பிறகு ஜனநாயகனுடன் விஜய்யுடன் கைகோர்த்துள்ளார் ஹெச்.வினோத்.
அவரது இயக்கத்தில் கேவிஎன் புரொடெக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் அடுத்தாண்டு பொங்கலையொட்டி வரும் ஜனவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கல்கி படத்தை தொடர்ந்து பான் இந்தியா படமாக உருவாகி வரும் தி ராஜா சாப் திரைப்படமும் ஜனவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் பிரபாஸுடன் நடிகை மாளவிகா மோகனன் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும் நிதி அகர்வால், சஞ்சய் தத் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஏற்கெனவே ஜனநாயகனுடன் சிரஞ்சீவியின் மன சங்கர் வர பிரசாத் காரு மோதும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த போட்டியில் தி ராஜா சாப் திரைப்படமும் இணைந்துள்ளது.
இதன்மூலம் தென்னிந்தியாவைச் சேர்ந்த உச்சநடிகர்களும், கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர்களுமான விஜய், சிரஞ்சீவி மற்றும் பிரபாஸ் ஆகியோர் மோதுவதால் இந்தாண்டு ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து காத்திருக்கிறது என உறுதியாக சொல்லலாம்.
