விஜய் சிறந்த நடிகர், ஆனால் அரசியல்வாதியல்ல : எடப்பாடி பழனிசாமி அட்டாக்

Published On:

| By Kavi

விஜய் சிறந்த நடிகர், ஆனால் சிறந்த அரசியல்வாதியல்ல என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி இன்று (ஜனவரி 29) நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் கலந்துகொண்ட பின் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் “ எனது அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுக ஆட்சியமைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அப்படியானால் அதிமுக ஒன்றிணைய வேண்டும். அதற்கு நான் ரெடி. எடப்பாடி ரெடியா என்று கூறியிருக்கிறாரே” என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக பொதுக்குழுவில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி, ஓ.பன்னீர் செல்வத்தைக் கட்சியில் சேர்க்க எந்த வாய்ப்பும் இல்லை” என்று பதிலளித்தார்.

ADVERTISEMENT

சரத்குமார், அன்புமணி எல்லாம் கூட்டணி ஆட்சி என்கிறார்களே?

அன்புமணி அப்படி  சொல்லவே இல்லையே… சரத்குமார் ஒரு கட்சிக்கு தலைவர் இல்லையே. தொண்டர்கள் உற்சாகமாக செயல்பட வேண்டும் என்பதற்காக இப்படி சொல்லலாம்.

ADVERTISEMENT

அதிமுக நிலைப்பாடு என்ன?

அதிமுக தான் ஆட்சி அமைக்கும்.

தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை எந்த அளவுக்கு இருக்கிறது?

மற்றக் கட்சிகளுடன் பேசி இறுதி செய்யப்பட்ட பிறகு தொலைக்காட்சிகளை அழைத்து பேட்டி கொடுப்பேன்.

எந்தெந்த கட்சிகள் பேசுகின்றன? 

நிறைய கட்சிகள் பேசுகின்றன… அதையெல்லாம் ஓபனாக சொல்ல முடியுமா?

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் மகளிர் மாநாட்டில் பேசியிருக்கிறார். ஆனால் பாலியல் வன்கொடுமை செய்து ஒரு குடும்பத்தையே கொன்றிருக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது என்று செய்தியாளர்கள் கூற, 

அதுமட்டுமல்ல, இன்றைக்கும் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. நான் ட்வீட் செய்துவிட்டுதான் வந்திருக்கிறேன். தினந்தோறும் பாலியல் சீண்டல்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. இந்த ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை.

என்.டி.கூட்டணி ஒரு அழுத்தத்தால் ஏற்பட்ட கூட்டணி என்று விமர்சனம் எழுகிறதே?

கூட்டணி இல்லையென்றால், எடப்பாடி பழனிசாமி கடையை விரித்துவைத்திருக்கிறார், யாரும் வரவில்லை என்பீர்கள். கூட்டணி வந்த பிறகு, அழுத்தம் கொடுத்ததால் வந்த கூட்டணி என்பீர்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்பினால் எதுவும் செய்ய முடியாது. முதல் கூட்டம் பிரதமர் கலந்துகொண்டு மதுராந்தகத்தில் நடைபெற்றுவிட்டது. எங்கள் கூட்டணி 210 தொகுதியில் வெற்றி பெறும். மாற்று என்றால் அது அதிமுகதான்.

காங்கிரஸ் திமுக குறித்து…

பிளவு வந்துவிட்டதே… தினம்தோறும் ஊடகங்களில் போடுகிறீர்கள். நேற்று கூட கனிமொழி டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்திருக்கிறார். எதற்காக இந்த சந்திப்பு. எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு அடிமை என்றார்கள். யார் அடிமை. திமுகதான் அடிமை. அங்கே போய் கெஞ்சி கொண்டிருக்கிறார்கள்.  குழப்பம் வந்துவிட்டது. காங்கிரஸ் திமுகவில் இருக்குமா? இருக்காதா? என தடுமாற்றம் இருக்கிறது.

காங்கிரஸ் நிர்வாகிகளும் திமுக நிர்வாகிகளும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிமுக – திமுக என்றிருந்த தமிழகத்தில் தற்போது தமிழக வெற்றிக் கழகமும் முக்கிய  பங்கு வகிக்கிறதே? 

டிஆர்பி ரேட் ஏறுவதற்காக ஊடகத்திலும் பத்திரிகைகளிலும் போட்டு போட்டு காண்பிக்கிறீர்கள். என்ன பங்கு உள்ளது. வந்தால் தானே தெரியும்.

அவர் சிறந்த நடிகர்.  அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் சிறந்த அரசியல்வாதி அல்ல. சிறந்த அரசியல் கட்சி நாங்கள்தான். ரசிகர்கள் கூட்டமாக வருவார்கள். 1974ல் நான் அரசியலுக்கு வந்தேன். 51 ஆண்டுகளாக மக்களின் பிரச்சினையை அனுபவ ரீதியாக தெரிந்துகொண்டிருக்கிறேன்.

ஆனால் இன்று 41 உயிர்கள் போய்விட்டது. யாருக்காக உயிரிழந்தார்கள். ஆனால் அவர் என்ன செய்திருக்க வேண்டும். நேரடியாக வந்திருக்க வேண்டும். நாங்கள் எல்லாம் ஓடினோம். ஆனால் ஆறுதல் கூட உங்களால் சொல்ல முடியவில்லை.

சுனாமி வந்தபோது நாங்கள் எல்லாம் நேரில் சென்று நிலவரத்தை கண்டு மக்களுக்காக எல்லாம் செய்தோம்.

சினிமாவில் இருக்கும் வரை நன்றாக சம்பாதித்துவிட்டார். இப்போது பல கோடிகளை விட்டுவிட்டு வந்திருக்கிறேன் என்றால், யாருக்காக அதை செய்கிறீர்கள்.

திட்டம் இல்லாமல் போனதால் தானே 41 குடும்பம் இன்று அனாதையாகிவிட்டது. விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.

ஆனால் எங்களுக்கும் திமுகவுக்கும்தான் போட்டியே என்று விஜய் சொல்கிறாரே?

இது சுதந்திர நாடு. யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், பேசலாம்.  யாரையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் இது அரசாங்கம். அனுபவம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. தமிழகம் இன்று இவ்வளவு வளர்ச்சியடைந்திருக்கிறது என்றால் அதற்கு அதிமுகதான் காரணம்.

 

 

 

 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share