2023ம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு அணி, விளையாடிய 6 போட்டிகளில் 5ல் அபார வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து, 20 புள்ளிகளுடன் தமிழ்நாடு அணி காலிறுதிக்கும் தகுதி பெற்றது. vijay hazare trophy 2023
இந்நிலையில், நேற்று (டிசம்பர் 11) ராஜ்கோட்டில் நடைபெற்ற காலிறுதி ஆட்டங்களில், 4வது காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் மோதிக்கொண்டன.
இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் அஜின்கியா ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதை தொடர்ந்து, ஒருபுறத்தில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய திவ்யான்ஷ் சக்சேனா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மறுபுறத்தில், மற்றொரு துவக்க ஆட்டக்காரரான பிஸ்டா 37 ரன்களை சேர்த்து வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் அஜின்கியா ரஹானே 1 ரன்னுக்கு வெளியேறி அதிர்ச்சி அளித்தாலும், ஹர்திக் தாமோர் (24 ரன்கள்), பிரசாத் பவர் (59 ரன்கள்), சிவம் துபே (45 ரன்கள்), சம்ஸ் முலானி (27 ரன்கள்) ஆகியோர் பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தபோதும், தமிழ்நாடு அணியின் வருண் சக்ரவர்த்தி – சாய் கிசோர் சுழலில் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
இறுதியில், 227 ரன்களுக்கு மும்பை அணி தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதனையடுத்து 228 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு, பாபா அபரஞ்ஜித் மற்றும் என் ஜெகதீசன் நல்ல துவக்கம் அளித்தனர். ஜெகதீசன் 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து ஜோடி சேர்ந்த பாபா அபரஞ்ஜித் மற்றும் பாபா இந்திரஜித் அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர். அபரஞ்ஜித் 45 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திரஜித் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் விளாசி அசத்தினார்.
விஜய் சங்கர் தனது பங்கிற்கு 51 ரன்களை குவிக்க, 44வது ஓவரிலேயே தமிழ்நாடு அணி தனது வெற்றி இலக்கை எட்டியது.
முன்னதாக நடைபெற்ற முதல் 3 காலிறுதி ஆட்டங்களில், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா ஆகிய அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இவர்களில், வரும் டிசம்பர் 13 அன்று ஹரியானா அணியுடன் முதல் அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி மோதவுள்ளது. 2வது அரையிறுதிப் போட்டியில், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அந்த போட்டி டிசம்பர் 14 அன்று நடைபெறவுள்ளது.
இந்த தொடரின் இறுதிப்போட்டி டிசம்பர் 16 அன்று நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
தண்டவாளத்தில் விரிசல்: கடற்கரை – தாம்பரம் ரயில் சேவை பாதிப்பு!
வேலைவாய்ப்பு : சிஎஸ்ஐஆர்-ல் பணி!
vijay hazare trophy 2023