“விஜய் அரசியல் சக்தியாக மாறிவிட்டார்” : பிரவீன் சக்கரவர்த்தி பேட்டி!

Published On:

| By Kavi

தவெக தலைவர் விஜய் அரசியல் சக்தியாக மாறிவிட்டார் என பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது. காங்கிரஸைச் சேர்ந்த சிலர் ஆட்சியில் பங்கு என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

அதேசமயம் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்தநிலையில், இன்று (ஜனவரி 7) கோவை தனியார் ஹோட்டலில் காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

ADVERTISEMENT

அப்போது அவர், ‘ காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை, காங்கிரஸ் தொண்டர்கள் கோரிக்கை அதிக சீட், ஆட்சியில் பங்கு , அதிகாரத்தில் பங்கு என்பதுதான்’ என தெரிவித்தார்.

மேலும் அவர், ‘எதற்கு இந்த கோரிக்கை எழுகின்றது என்றால் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் பலவீனமாகவே போய்க்கொண்டு இருக்கிறது, தற்பொழுது பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது எனவும், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்திற்காக இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

ADVERTISEMENT

ஆட்சியில் பங்கு என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒருமித்த கருத்து இல்லாதது குறித்த கேள்விக்கு, ‘ காங்கிரஸ் கட்சியில் சில எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆகியோருக்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம். ஊட்டி விடும் கையை யாராவது கிள்ளுவார்களா?.

யாருக்கு என்ன கட்டுப்பாடு இருக்கிறது. அவர்கள் தொகுதியில் வேலை நடக்க வேண்டும், வழக்கு இருக்கிறது என ஏதாவது இருக்கலாம்” என்றார்.

பிரவீன் சக்கரவர்த்தி உட்பட சிலர் பேசுவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என எம்.பி.கார்த்திக் சிதம்பரம் பேசியது குறித்த கேள்விக்கு, “கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி தலைமை தான் முடிவு எடுக்கும். காங்கிரஸ் தொண்டர்கள் அவர்கள் கோரிக்கையை வைக்கலாம். காங்கிரஸ் கட்சி ஒரு ஜனநாயக கட்சி” என கூறினார்.

மேலும் அவர், “தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை சந்தித்து பேசினேன். எனக்கு நிறைய அடையாளங்கள் இருக்கிறது, அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்தேன். டெல்லியில் இதே போல நிறைய பேரை சந்திக்கிறேன், தமிழகத்தில் தான் இப்படி கேட்கிறீர்கள்” என குறிப்பிட்ட பிரவீன் சக்ரவர்த்தி, “விஜய் கூட்டத்திற்கு மக்கள் உற்சாகமாக வருகின்றனர், அது வெளிப்படையாக தெரிகிறது. ஆனால அது ஓட்டாக மாறுமா? மாறாதா ? என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்படுகிறது. மக்கள் அவரை நடிகராக பார்க்க வரவில்லை. ஒரு அரசியல்வாதியாக பார்க்க வருகின்றனர். அவர் ஒரு சக்தியாக தமிழகத்தில் உருவாகிவிட்டார்” என்றார்.

காங்கிரஸ் தமிழகத்தில் தனித்து போட்டியிடலாமே என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர், “யார் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும், அதற்கு பதில் சொல்ல தேவையில்லை” என பதிலளித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share