மது விற்பனை.. ‘சம்பவம்’ செய்யப் போகும் விஜய் அரசு! அன்புமணி கடும் எதிர்ப்பு!

Published On:

| By Mathi

Vijay Govt Plans to Allow Private Liquor Shops After 23 Years

தமிழ்நாட்டில் 23 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தனியார் மதுபான கடைகளுக்கு அனுமதி அளிக்க முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக அரசுக்கு வருவாய் அளிக்கக் கூடிய துறைகளில் முக்கியமானது டாஸ்மாக் மதுபான விற்பனை. தற்போது தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான மதுபான கடைகளை அரசு நிறுவனமான டாஸ்மாக் நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

கடந்த சில ஆண்டுகளாக நகரங்களில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியாருக்கும் குறைந்த அளவு அனுமதி தரப்பட்டது. தற்போதைய முதல்வர் விஜய் ஆட்சியிலும் மனமகிழ் மன்றங்களுக்கு ‘கூடுதல் டெபாசிட்’ தொகையுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளை தனியார்மயமாக்க அரசு ஆலோசித்து வருவதாக அமைச்சர் விக்னேஷ் கூறியிருந்தார். இதனடிப்படையில் தமிழ்நாட்டில் கணிசமான எண்ணிக்கையில் தனியார் மதுபான கடைகளுக்கு அரசு அனுமதி அளிக்க இருப்பதாகவும் இதற்கான சட்ட திருத்தம் விரைவில் சட்டசபையில் நிறைவேற்றப்படும் எனவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் 23 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தனியார் மது விற்பனைக்கு அரசு அனுமதி கொடுக்க இருப்பது பல்வேறு விவாதங்களை உருவாக்கி உள்ளது.

அன்புமணி எதிர்ப்பு

இதனிடையே டாஸ்மாக்கை தனியார்மயமாக்க பாமக தலைவர் அன்புமணி ராதமாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 4048 மதுக்கடைகளில் நகரப்பகுதிகளில் உள்ள சுமார் 2500 மதுக்கடைகளை மட்டும் தனியார் மயமாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால் தமிழக அரசின் முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசின் இலக்காக இருக்க வேண்டும். இந்த இலக்கை நோக்கிய பயணத்தில் இடது புறம் திரும்புவதோ, வலதுபுறம் திரும்புவதோ அல்லது ‘U’ வளைவில் திரும்புவதோ மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

தமிழ்நாடு அரசே மது விற்பனை செய்கிறது என்ற அவமானத்தை போக்க வேண்டும்; மதுக்கடைகளில் கூடுதல் விலை வசூலிக்கப்படுவதை கட்டுப்படுத்த முடியவில்லை என்பன போன்றவைதான் தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொழுத்துவதற்கு ஒப்பானதாகும். அரசே மது விற்பனை செய்கிறது என்பது மானக்கேடானது. இந்த இழுக்கை போக்குவதற்கான தீர்வு அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்துவதுதானே தவிர மதுக்கடைகளை தனியாரிடம் தாரை வார்ப்பது அல்ல. தமிழ்நாட்டில் தனியார் மதுக்கடைகள் செயல்பட்டு வந்த போது அவற்றில் சட்ட விரோதமாக மது வணிகம் செய்யப்பட்டது, ஓர் இடத்தில் உரிமம் பெற்றுக்கொண்டு, இப்போது செயல்படும் சந்துக்கடைகளைப் போல பல இடங்களில் கிளைகள் திறந்து மது விற்பனை செய்யப்பட்டது, மதுக்கடைகளிலேயே கள்ளச்சாராயமும் விற்பனை செய்யப்பட்டது உள்ளிட்ட காரணங்களால்தான் தனியார் மதுக்கடைகள் மூடப்பட்டு 2002-03 -ம் ஆண்டில் அரசு மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்த முடிவை மாற்றி மீண்டும் பழைய நடைமுறைக்கே செல்வது சீர்திருத்தம் அல்ல… மாறாக சீர்கேடாகத்தான் கருதப்படும்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்தே, தமிழ்நாட்டில் மதுக்கடைகளை தனியார் மயமாக்குவதற்கும், வெளி மாநிலங்களில் இருந்து மதுவை கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்கும் ஒரு லாபி தீவிரமாக முயன்று வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. இருப்பினும் தமிழ்நாட்டின் ஒற்றை அதிகார மையம் நான்தான் என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் மீண்டும் மீண்டும் கூறி வந்ததால் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்று மதுவிலக்கு ஆதரவாளர்கள் நம்பினார்கள். ஆனால் இப்போது வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

தனியார் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் மது வெள்ளமாக பாயும். சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் இன்னும் அதிக அளவில் மதுவுக்கு அடிமையாவார்கள். அப்படியொரு நிலை ஏற்பட அரசே வழிவகுக்கக் கூடாது எனவே தமிழ்நாட்டில் மதுக்கடைகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share