10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த 9 மாணவர்களுக்கு விஜய் வைர கம்மல், மோதிரத்தை பரிசளித்தார்.
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை அழைத்து பரிசு மற்றும் ஊக்கத்தொகை கொடுத்து பாராட்டி வருகிறார்.
விஜய் கட்சி தொடங்கிய பிறகு முதல்முறையாக இன்று (ஜூன் 28) 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கினார்.
சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவில், முதல்கட்டமாக 21 மாவட்டங்களை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விருது மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த சென்னை, கொளத்தூரைச் சேர்ந்த பிரதிக்ஷா,
திருப்பூரை சேர்ந்த மகாலட்சுமி, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தைச் சேர்ந்த தொஷிதா லட்சுமி ஆகியோருக்கு வைர கம்மலை பரிசாக வழங்கினார்.
அதுபோன்று 10ஆம் வகுப்பில் மாநில அளவில் முதல் 6 இடங்களை பிடித்த தருமபுரியைச் சேர்ந்த தேவதர்ஷினி, கருரைச் சேர்ந்த சந்தியா, திண்டுக்கல் காவிய ஸ்ரீ,
ஈரோடு கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த கோபிகா, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுலத்தூரைச் சேர்ந்த காவியா ஜனனி,
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்த சஞ்சனா ஆகியோருக்கு வைர மோதிரத்தை வழங்கினார் விஜய்.
பரிசுகளை பெற்றுக்கொண்ட மாணவிகள் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர்.
கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் முனைவர் பட்டம் பெற விண்ணப்பிக்கலாம்!