நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டுக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழக கட்சியை தொடங்கி அடுத்தடுத்து அரசியல் பணிகளில் பிஸியாக இருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.
அதில் வாகைப் பூ, யானை சின்னங்கள் இடம் பெற்றுள்ளன. யானை இடம் பெற்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விஜய் கட்சிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தை பகுஜன் சமாஜ் கட்சி அணுகியுள்ளது.
எனினும் 2026 தேர்தலை இலக்கு வைத்து காய் நகர்த்தி வரும் விஜய், கட்சியின் முதல் மாநாட்டை அடுத்த மாதம் நடத்தவுள்ளார்.
இந்நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டுக்கு பாதுகாப்பு கேட்டு அக்கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி. திருமாலையிடம் இன்று (ஆகஸ்ட் 28) மனு அளித்திருக்கிறார். அந்த மனுவில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மாவட்ட ஆட்சியரிடமும் புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், ’மாநாடு குறித்த விவரங்களை கட்சித் தலைவர் அறிவிப்பார்’ என்று கூறினார்.
காவல்துறையினரிடம் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த மனுவில், “தவெக மாநாட்டை நடத்துவதற்காக 85 ஏக்கர் நிலப்பரப்பை வாடகைக்கு பெற்றுள்ளோம்,
இந்த மாநாட்டிற்கு சுமார் 1.5 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மாநாட்டுக்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தையும் முறையாக நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.
விழுப்புரத்தில் இருந்து சென்னை செல்லும் பாதையில் இடது புறம் சுமார் 28 ஏக்கர் நிலப்பரப்பு வாடகைக்கு பெற்றுள்ளோம். இதில் தமிழ்நாட்டின் தென் பகுதியில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதே பாதையில் வலது புறம் சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பு வாடகைக்கு பெற்றுள்ளோம். இதில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பு வாடகைக்கு பெற்றுள்ளோம். மாநாட்டிற்க்கு வரும் தோழர்களும், பொதுமக்களும் எளிமையாக கூட்ட நெரிசலின்றி வந்து செல்வதற்கு வசதியாக மாநாட்டுத் திடலில் இருந்து உள்ளே செல்வதற்கான மூன்று வழிகளும், வெளியே செல்வதற்கான மூன்று வழிகளும் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
மாநாட்டிற்கு வரும் அனைவருக்கும் முறையான உணவு வசதி, தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.
இவற்றுடன் தேவையான ஆம்புலன்ஸ் வேன்களும் அங்கு நிறுத்தப்பட உள்ளது. தீயணைப்புத்துறையின் அனுமதியும். பாதுகாப்பும் கோரவுள்ளோம்.
இம்மாநாட்டிற்கு காவல்துறை தரப்பில் இருந்து தாங்கள் கொடுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி, பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் மாநாட்டை முறையாக நடத்துவோம் என்று உறுதி அளிக்கிறேன்.
எனவே இந்த மாநாட்டுக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
வேறு ஒருவர் கூட முன்மொழியப்படவில்லை… 35 வயது ஜெய்ஷாவின் புதிய ஆட்டம் ஆரம்பம்!
மலையாள நடிகைகளின் பாலியல் குற்றச்சாட்டுகள் : “No என்றால் No தான்”…குஷ்பு பதிவு!