தைப்பூசத்திற்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்க் கடவுள் என வர்ணிக்கப்படும் முருகப்பெருமானை வழிபடுவதில் தைப்பூசத் திருநாளும் முக்கியமான ஒன்றாகும். தை மாதத்தில் பூசம் நட்சத்திரமும் பௌர்ணமியும் இணைந்து வரும் நாளைத் தைப்பூசத் திருநாளாகக் கடைபிடிக்கிறோம்.இந்நாளில் தமிழகத்தில் உள்ள பல்வேறு முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் திருவிழாக்களும் நடைபெறுகின்றன. தமிழகம் மட்டுமின்றி, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட உலகெங்கும் உள்ள தமிழர்கள் முருகப்பெருமானை வழிபடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு தவெக தலைவர் விஜய் தைப்பூசத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில்,”தமிழ்க் கடவுள் முருகப் பெருமானைப் போற்றி வணங்கும், உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவரது இல்லங்களிலும் வளம், மகிழ்ச்சி, வெற்றி ஆகியவை நிலைக்கட்டும்.இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ்பதிவில், “இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்கள், அறமும் வீரமும் இணைந்த தெய்வ வடிவமாக போற்றப்படும் வேலவன் அருளால், “வேலுண்டு வினையில்லை” என்பதற்கு ஏற்ப வினைகள் விலகி வெற்றிகள் மலரும் நாள் , இந்த தைப்பூசம் திருநாள். வேல் ஏந்தி தீமைகளை அகற்றி, அன்பும் கருணையும் அருளும் முருகப் பெருமானின் பூரண அருளால், உலகெங்கும் வாழும் தமிழர்கள் வாழ்வு மலரட்டும்.
வெற்றிகள் தொடரட்டும். தீமையின் பிடியில் இருந்து தமிழகம் மீளட்டும். கந்தனின் அருளால், தமிழ்நாடு உயர்ந்து ஒளிரட்டும். தைப்பூசம் திருநாளை அரசுப் பொது விடுமுறையாக எனது தலைமையிலான , அம்மாவின் அதிமுக அரசு அறிவித்தமையை உள்ளார்ந்த பெருமிதத்தோடு நினைவுகூர்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய அமைச்சர் எல். முருகனும் தைப்பூசத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில்,”திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்-முருகா
திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்..கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த முதல் குடியாம் தமிழ்க் குடியின் ஆதி கடவுளாய், நாம் அன்போடு போற்றுகின்ற அருள்மிகு முருகப் பெருமானின் உகந்த தினமான ‘தைப்பூசம்’ திருநாள் வாழ்த்துகளை, உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவருக்கும் மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பாக நடைபெற்ற ‘வேல் யாத்திரை’ நிகழ்வின் போது, இத்திருநாளுக்கான அரசு விடுமுறையைப் பெற்றுத் தந்தோம் என்பதில் பெருமிதம் அடைகிறோம். மேலும், நம் மக்கள் அனைவருக்கும், அவரவர் நினைத்த நற்காரியங்களும், சகலவிதமான மகிழ்வோடு, அப்பன் முருகப் பெருமானின் அருளும் கிடைத்திட வேண்டுமென்று மனமார வேண்டிக் கொள்கிறேன்.வெற்றிவேல்..! வீரவேல்..!”எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் தனது எக்ஸ் பதிவில்,”பக்தியும் பொறுமையும் துணையாக, அன்பும் அறமும் வழிகாட்ட, இந்த தைப்பூசத் திருநாளில் தாய் மடியில் தழுவும் பிள்ளையென எங்களைக் காத்து சோதனைகளில் துணையாய் நின்று, வெற்றியின் வழி காட்டி, உன் அருளால் எங்கள் வாழ்வெங்கும் நம்பிக்கை, ஆனந்தம் நிரம்பச் செய்ய உன்னை மனம் உருகி வேண்டிக் கொள்கிறேன். நம் தமிழகத்தை இருள் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில் விடியா திமுக ஆட்சியை அகற்ற அருள் புரிய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் நம் தமிழர்களின் வாழ்நாள் கோரிக்கையான தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த ஆட்சியில் 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த நேரத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.வெற்றிவேல்..! வீரவேல்..!”எனத் தெரிவித்துள்ளார்.
