தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமது ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததால் வருமான வரித்துறை ரூ1.50 கோடி அபராதம் விதித்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
- 2015-ம் ஆண்டு விஜய் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றி இருந்தனர்.
- 2015-16-ம் ஆண்டில் விஜய் தமது வருமானம் ரூ35,42,91,890 (ரூ.35.42 கோடி) என வருமான வரித்துறையிடம் காட்டி இருந்தார்.
- விஜய் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் அவர் தாக்கல் செய்த கணக்குகளை வருமான வரித்துறை ஒப்பீடு செய்தது.
- அப்போது, “புலி” திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் வாங்கிய ரூ.15 கோடி பணத்தை கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டது.
- ரூ.15 கோடி வருமானத்தை விஜய் மறைத்ததால் 2022-ம் ஆண்டு ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது வருமான வரித்துறை.
- வருமான வரித்துறையின் இந்த அபராத உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்தார்.
- வருமான வரித்துறை தமக்கான அபராதத்தை 2019-ம் ஆண்டு ஜூன் 30-ந் தேதிக்கு முன்னர் விதித்திருக்க வேண்டும்; ஆனால் 3 ஆண்டுகள் தாமதமாக 2022-ம் ஆண்டு ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது தவறு என விஜய் தரப்பில் வாதிடப்பட்டது.
- வருமான வரித்துறை தரப்பில், உரிய காலத்தில்தான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது; விஜய் மனுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
- இதனையடுத்து விஜய்க்கு அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
- நீதிபதிகள் செந்தில்குமார், ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இவ்வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்று தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
- இவ்வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
- முன்னதாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி ரூ.20 கோடி; இதை கட்டாவிட்டால் முடக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை நேற்று பிப்ரவரி 4-ந் தேதி தெரிவித்திருந்தது; இந்த வழக்கு பிப்ரவரி 16-ந் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் விஜய், வருமான வரி அபராத வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
