நடிகர் விஜய், இன்னும் பக்குவப்பட வேண்டும் . விஜய்யின் மக்கள் இயக்கம் சரியான நிர்வாகத்தைக் கொடுக்க முடியாது. நேர்மையான மற்றும் திறமையான நிர்வாகிகளை உடன் வைத்துக்கொள்ள வேண்டும் என விஜய்யின் முன்னாள் மேலாளரும், சமீபத்தில் திமுகவில் இணைந்தவருமான பி.டி. செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் இன்று (டிசம்பர் 17) பி.டி செல்வ குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ” சுமார் 28 ஆண்டுகள் விஜயுடன் மேலாளராகப் பணியாற்றினேன். ‘புலி’ திரைப்படத்தின் போது வருமான வரிச் சோதனை மற்றும் உடல் நிலை சரியில்லாத காலங்களில், அவரிடமிருந்து ஆதரவோ, ஒரு தொலைபேசி அழைப்போ கூட வரவில்லை. எதிர்காலத்திலும் விஜய் என்னைக் கண்டுகொள்ளமாட்டார். இதை நான் உணர்ந்ததாலேயே திமுகவில் இணைந்தேன் என்றார்.
நடிகர் விஜய், இன்னும் பக்குவப்பட வேண்டும் . விஜய்யின் மக்கள் இயக்கம் சரியான நிர்வாகத்தைக் கொடுக்க முடியாது. நேர்மையான மற்றும் திறமையான நிர்வாகிகளை உடன் வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, விஜய்யின் இயக்கத்தில் இருக்கும் ஒரு சில பொறுப்பாளர்கள் (“புஸ்ஸி ஆனந்த்” போன்றோர்) பணத்தைப் பெற்றுக்கொண்டு பதவிகளை வழங்குகின்றனர். அவர்கள் விஜயை தவறாக வழிநடத்தி வருகின்றனர் என குற்றம் சாட்டினார்.
தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை, விவசாயிகளின் பிரச்சனை, பனியன் தொழிற்சாலைகள் உள்ளிட்ட சமூகப் பிரச்சனைகள் குறித்து விஜய் களம் இறங்கி நேரில் சென்று, கிராமங்கள் தோறும் மக்களுடைய பிரச்சனைகளைத் தெரிந்துகொண்டால் மட்டுமே, மக்கள் நலன் சார்ந்து ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும். இல்லையேல் மக்கள் அவருக்குத் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் என்றும் எச்சரித்தார்.
