திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.க்கு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி இன்று (ஜனவரி 5) தனது 56ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
நேற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த தூத்துக்குடி பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொண்ட கனிமொழி, இன்று சென்னை சென்றார். காலை மெரினா சென்ற கனிமொழி, அண்ணா நினைவிடத்திலும், கலைஞர் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின் முதல்வரும், தனது அண்ணனுமான ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில் இன்று மாலை நடிகர் விஜய், கனிமொழிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு விஜய் நிவாரண உதவி வழங்கியதை சுட்டிக்காட்டி கனிமொழி நன்றி தெரிவித்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக கனிமொழி, “எனது பிறந்தநாளை முன்னிட்டு நண்பர்கள் மற்றும் கட்சியினர் என்னைச் சந்திக்க வருவதையும், பூங்கொத்து உள்ளிட்ட வாழ்த்துப் பொருள்கள் அனுப்புவதையும் தவிர்த்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மௌன குரு இயக்குநரின் அடுத்த படம் : “ரசவாதி” டீசர் ரிலீஸ்!
டி20 உலகக்கோப்பை தொடர் அட்டவணை: இந்தியா – பாகிஸ்தான் மோதல் எப்போது?